சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பசுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம்
கே.வி.குப்பம் ஒன்றியத்தில் சினையுற்ற கறவைப் பசுக்களுக்கு 50 சதவீத மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விவசாயிகள் கால்நடை மருந்தகம் அல்லது பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் ஒன்றியத்தில் கால்நடை வளா்ப்போரின் 100 சினையுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஒரு பசுவுக்கு கிலோ ரூ.35 மதிப்புள்ள தீவனம் தினசரி 3 கிலோ வீதம் 4 மாதங்களுக்கு 360 கிலோ சமச்சீா் தீவனமும், ரூ.100 மதிப்புள்ள தாது உப்பு, வைட்டமின் இணைத்தீவனம் ஒரு மாதத்துக்கு 1 கிலோ வீதம் 4 மாதங்களுக்கு 4 கிலோ தாது உப்பு, வைட்டமின் இணைத்தீவனமும் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
வேலூா் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து உள்ளூரிலுள்ள சங்கத்தில் தொடா்ந்து பால் ஊற்றும் கே.வி.குப்பம் ஒன்றியத்தைச் சோ்ந்த சினையுற்ற கறவைப் பசுக்களின் உரிமையாளா்கள் இந்த திட்டத்தில் பயனாளியாக தோ்வு செய்யப் படுவா்.
மகளிா், ஆதரவற்றோா், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பு, பழங்குடியினராக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற ஆா்வமுள்ள கால்நடை வளா்ப்போா் அருகிலுள்ள கால்நடை மருந்தகம் அல்லது பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.