ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது! பிரதமர் மோடி
அணு ஆயுத மிரட்டலுக்கு எல்லாம் இந்தியா அஞ்சாது என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் 12-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்த பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
”சுதந்திர நாள் விழாவானது 140 கோடி மக்களின் கொண்டாட்டம். 75 ஆண்டுகளாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் கலங்கரை விளக்கம் போல நமக்குப் பாதையைக் காட்டி வருகிறது. நாட்டுக்கு வழிகாட்டும் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களுக்கு எனது செங்கோட்டையில் இருந்து மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
கடந்த சில நாள்களாக, இயற்கை பேரழிவுகள், நிலச்சரிவுகள், மேக வெடிப்புகள் மற்றும் பல பேரிடர்களை நாம் சந்தித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது அனுதாபங்கள். மீட்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகளில் மாநில அரசுகளும் மத்திய அரசும் முழு பலத்துடன் இணைந்து செயல்படுகின்றன.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகள் கற்பனையில் எட்டாத தண்டனை அளித்திருக்கும் நமது துணிச்சலான வீரர்களுக்கு வணக்கத்தை செலுத்துக் கொள்கிறேன்.
எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள் பஹல்காமில் மக்களின் மதத்தைக் கேட்டுக் கொன்றார்கள். இந்த படுகொலைகளால் முழு உலகமும் அதிர்ச்சியடைந்தது. ஆபரேஷன் சிந்தூர் என்பது அந்த சீற்றத்தின் வெளிப்பாடாகும். ஆயுதப் படைகளுக்கு நாங்கள் சுதந்திரம் கொடுத்தோம். பல தசாப்தங்களாக செய்யப்படாததை நமது படைகள் செய்தன. பாகிஸ்தானுக்குள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நுழைந்து அவர்களின் பயங்கரவாத தலைமையகத்தை தரைமட்டமாக்கினோம்.
ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக பாய முடியாது என்று இந்தியா தீர்மானித்தது. சிந்து நதி ஒப்பந்தம் எவ்வளவு அநீதியானது மற்றும் ஒருதலைப்பட்சமானது என்பதை நம் நாட்டு மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் உருவாகும் ஆறுகளின் நீர் நமது எதிரிகளின் வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்து வருகிறது. ஆனால், நமது சொந்த விவசாயிகள் தண்ணீரின்றி தாகத்தில் உள்ளனர். கடந்த ஏழு தசாப்தங்களாக எனது நாட்டின் விவசாயிகளுக்கு நினைத்துப் பார்க்க முடியாத சேதத்தை ஏற்படுத்திய ஒரு ஒப்பந்தம் இது. இப்போது, தண்ணீரின் மீதான உரிமை இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே சொந்தமானது.
அணு ஆயுத மிரட்டல்களுக்கு எல்லாம் இந்தியா அடிபணியாது.” எனத் தெரிவித்தார்.