கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!
Thyroid Reversal: தைராய்டு தானாகவே ரிவர்ஸ் ஆகுமா? உண்மையை உடைக்கும் மருத்துவர்கள்! | InDepth
தைராய்டு ரிவர்சல்
அடிக்கடி சோஷியல் மீடியாக்களில் கண்களில்படுகிற விளம்பரம் இது. 'உங்க தைராய்டு ரிவர்சல் ஆகணுமா? இத சாப்பிடுங்க; இத சாப்பிடாதீங்க; இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க' என்று ரீல்ஸ் வரும். கூடவே, முழு வீடியோவையும் க்ளிக் பண்ணி பாருங்க என்று ஆர்டரும் போடுவார்கள். உண்மையிலேயே தைராய்டை ரிவர்ஸ் செய்ய முடியுமா என்று, நாளமில்லா சுரப்பி நிபுணர் உஷா, சித்த மருத்துவர் செல்வ சண்முகம், இயற்கை மருத்துவர் யோ. தீபா, ஆயுர்வேத மருத்துவர் ப்ரீத்தா நிலா ஆகியோரிடம் கேட்டோம்.

'' 'தைராய்டு ரிவர்சல்' என்பதே சரியான வார்த்தை கிடையாது என்றே சொல்லலாம். தைராய்டில் பிரச்னை என்றால், தேவையைவிட அது குறைவாக சுரக்கிறது அல்லது தேவைக்கும் அதிகமாக சுரக்கிறது என்று அர்த்தம்.
இதில் தைராய்டு அதிகமாக வேலை பார்ப்பதற்கு 3 அல்லது 4 பொதுவான காரணங்கள் இருக்கின்றன. இதற்கான மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொண்டால், ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் அது தானாகவே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என்பதுதான் அடிப்படை. இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், 10-ல் 8 பேருக்கு ஹைப்பர் தைராய்டு காரணமாக அவர்களுக்கு வருகிற அறிகுறிகளுக்கு மட்டும் மருத்துவ உதவி செய்தால், தைராய்டு பிரச்னை தானாகவே சரியாகி விடும். மீதமுள்ள 2 பேர் மட்டுமே தொடர்ந்து மாத்திரை எடுக்க வேண்டி வரலாம். குணமாகும் 8 பேரிலும் சிலருக்கு தைராய்டு பிரச்னை திரும்ப வராது. சிலருக்கு திரும்ப வரலாம். இதில் குணமானவர்களுக்கு தைராய்டு ரிவர்சல் என்று தனியாக எதுவும் செய்வதில்லை. அது இயற்கையாகவே நிகழ்கிறது. ஒருவேளை தைராய்டு சுரப்பியில் காய்ட்டர் (கட்டிபோல) வந்தால், அதற்கான சிகிச்சைகள் கட்டாயம் தேவைப்படும்.

தைராய்டு அதிகம் சுரப்பதில் மற்றும் குறைவாக சுரப்பதில் இரண்டு நிலைகள் இருக்கின்றன. ஒன்று, சப் கிளினிக்கல் ஹைப்பர்/ஹைப்போ தைராய்டிசம். இரண்டு, முழுமையான ஹைப்பர்/ஹைப்போ தைராய்டிசம். இந்த சப் கிளினிக்கல் ஸ்டேஜில், தைராய்டு பிரச்னை இருப்பது தெரிய வந்தால், எல்லோரும் சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியமில்லை. இதை சற்று விளக்கமாக சொல்கிறேன்.
TSH மற்றும் T 3, T 4 அளவு மருத்துவரீதியாக சரியாக இருந்தால் அது நார்மல். TSH சற்றுக்கூடுதலாக இருந்து T 3, T 4 நார்மலாக இருந்தால் அது சப் கிளினிக்கல் ஹைப்போ தைராய்டிசம். TSH அதிகமாக இருந்து T 3, T 4-ம் அதிகமாக இருந்தால் அது முழுமையான ஹைப்போ தைராய்டிசம்.

இதேபோல், TSH சற்றுக்குறைவாக, ஆனால் T 3, T 4 நார்மலாக இருந்தால் சப் கிளினிக்கல் ஹைப்பர் தைராய்டிசம், TSH சற்றுக்குறைவாக, ஆனால் T 3, T 4 அதிகமாக இருந்தால் முழுமையான ஹைப்பர் தைராய்டிசம்.
உதாரணத்துக்கு சப் கிளினிக்கல் ஹைப்போ தைராய்டிசத்தை எடுத்துக்கொண்டால், 100 பேருக்கு தைராய்டு பரிசோதனை செய்தால், அதில் ஒரு சிலருக்கு அந்த நேரத்தில் TSH சற்றுக்கூடுதலாக இருக்கும். அப்போது உடனே சிகிச்சையை ஆரம்பித்துவிடுவார்கள். சிலர் ஒன்றிரண்டு மாதங்கள் மாத்திரை சாப்பிட்டுவிட்டு நிறுத்தி விடுவார்கள். சில மாதங்களோ அல்லது வருடங்களோ கழித்து மறுபடியும் அவர்கள் தைராய்டு பரிசோதனை செய்துபார்த்தால், நார்மலாக இருக்கும். உடனே தைராய்டு ரிவர்ஸ் ஆகி விட்டது என்பார்கள்.
அதனால்தான், எங்களைப்போன்ற எண்டோகிரனாலஜிஸ்ட், ஒரு நபருக்கு தைராய்டுக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் ரத்த பரிசோதனையில் மட்டும் தைராய்டு இருப்பதாக தெரிய வந்தால், 3 வாரம் முதல் 6 மாதம் கழித்து வரை அவர்களை மறுபடியும் தைராய்டு பரிசோதனை செய்துபார்க்க சொல்வோம்.

இதில் இன்னொரு வகையும் இருக்கிறது. தைராய்டு சுரப்பி ஏதோவொரு காரணத்தால் இரிட்டேட் ஆகலாம். அப்படியாகும்போது தைராய்டு சுரப்பு குறையலாம் அல்லது அதிகமாகலாம். இதுவும் சில காலம் கழித்து தானாகவே இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். இதுபற்றியும் தெரியாமல், தைராய்டு ரிவர்ஸ் ஆகிவிட்டது என்கிறார்கள்.
உண்மை என்னவென்றால், தைராய்டு வந்தவர்களில் 70 சதவிகிதம் பேருக்கு தானாகவே சரியாகிவிடுகிறது. இதற்குக்காரணம் இயற்கைதான். இது தெரியாமல், தைராய்டை ரிவர்ஸ் செய்கிறேன் என்று சொல்பவர்களை நம்பாதீர்கள்.''

''தைராய்டு சுரப்புக் குறைபடுகள் சீராதல் என்பது பெரும்பாலும் சாத்தியம்தான். அதையும் மருந்தில்லா முறையிலேயே சாத்தியப்படுத்த முடியும். யோகா, உணவு முறை, வாழ்க்கை முறை ஆகிய மூன்றையும் முறையாக பின்பற்றினால் பெரும்பாலானவர்களுக்கு தைராய்டு இயற்கை முறையிலேயே சரியாகிவிடும் என்பதுதான் உண்மை.
முதலில் உணவைப் பற்றி சொல்லி விடுகிறேன். தைராய்டு விஷயத்தில் ஒத்துக்கொள்ளாத உணவுகளான மைதா, கோதுமை, ரவை, ஓட்ஸ், வெள்ளை சர்க்கரை, பாலீஷ் செய்யப்பட்ட அரிசி, மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் போன்ற உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். தவிர, உடலுக்கு எந்த வகையிலும் ஆரோக்கியம் வழங்காத மற்றும் ஆரோக்கியத்தைக் கெடுக்கிற செறிவான இனிப்பூட்டப்பட்ட குளிர்பானங்கள், சுவையூட்டப்பட்ட பாக்கெட் உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். 'நாங்க இந்த உணவுகளை சாப்பிட்டுக்கிட்டுதான் இருக்கோம். இருந்தாலும் எங்களுக்கு தைராய்டு இல்லையே' என்று சிலர் வாதிடலாம். பொதுவாக இதுபோன்ற ஆரோக்கியத்துக்கு ஒவ்வாத உணவுகள் உடனடியாக தன்னுடைய கெடுதல் முகத்தை வெளிப்படுத்தாது. பலகாலம் தொடர்ந்து இந்த வகை உணவுகளை சாப்பிடும்போதுதான் உடலின் 'ஆட்டோஇம்யூன் ஃபங்க்ஷனில்' கோளாறுகளை ஏற்படுத்தி அதுதொடர்பான வாழ்வியல் நோய்களையும் வரவழைக்கும். ஒருவேளை, ஏற்கனவே தைராய்டு பிரச்னை இருப்பவர்கள், ஒவ்வாத உணவை ( ஜங்க் ஃபுட்ஸை) தொடர்ந்து சாப்பிட்டால், அது குணமாகாமலே போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

இரண்டாவதாக வாழ்க்கை முறையை எடுத்துக்கொண்டால், சரியான தூக்கத்தைத்தான் முதலில் சொல்வேன். பகலில் தூங்கி இரவில் வேலைபார்ப்பவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றபடி எந்த நேரத்தில் உண்பது, எப்படி அறையை இருட்டாக்கிக்கொண்டு தூங்குவது உள்ளிட்ட தீர்வுகளை சொல்லித் தருவோம். ஆனால், பகலில் வேலைபார்ப்பவர்கள்கூட விடியற்காலை இரண்டு மணிக்கு தூங்கி காலை 8 அல்லது 9 மணிக்கு கண் விழிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை 'நாங்க 7 மணி நேரம் தூங்கிட்டோமே' என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம் உடலுக்குள் இருக்கிற சர்க்காடியன் ரிதம் (Circadian rhythm) என்கிற உடலியல் கடிகாரத்தின்படி, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒவ்வொரு உறுப்பு வேலைபார்க்கும். அந்த நேரத்தில் நாம் விழித்துக்கொண்டிருந்தால் நம் உடல் உறுப்புகளால் சரிவர வேலை செய்ய முடியாமல் போகும். இது தொடர்ந்துகொண்டே இருந்தால் தைராய்டு பிரச்னை போன்ற வாழ்வியல் பிரச்னையை ஏற்படுத்தி விடும். அதனால், இரவில் நேரத்துக்கு படுத்து காலை ஆறு மணிக்கு முன்பாக கண் விழிக்க பழகுங்கள். உடலியல் கடிகாரமும் ஒழுங்காக வேலைபார்க்கும். தைராய்டும் வராது. ஒருவேளை வந்தாலும் அதனால் தன்னை மீட்டுருவாக்கம் செய்துகொள்ள முடியும்.
தூக்க ஒழுக்கம் இல்லையென்றால், அது நேரடியாக மூளையில் நிகழ்கிற வளர்சிதை மாற்றத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். நரம்புகளில் வெளியிடப்படுகிற வேதிப்பொருள்களில் மாறுபாடு ஏற்படலாம். இதனால், மெலடோனின், செரடோனின் மற்றும் டோபமைன் போன்ற ஹார்மோன்களில் பிரச்னை ஏற்படலாம். தவிர, மூளையில் இருக்கிற ஹைப்போதாலமஸிலும் பிரச்னை ஏற்படலாம். இது தொடர்ந்துகொண்டே இருக்கும்பட்சத்தில் நாளடைவில் தைராய்டின் வேலை ஒழுங்கற்றுப் போகும். எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம் என்பது தைராய்டு பிரச்னை வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இதனுடன் வாரம் இருமுறை எண்ணெய்க்குளியல், வருடம் இருமுறை குடல் சுத்தம், குடலுக்குள் இருக்கிற நுண்ணுயிர்களைப் பாதுகாக்கும் உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவற்றை ஒரு சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி உங்கள் உடல் தன்மைக்கு ஏற்றபடி பின்பற்றி வர வேண்டும். குடலில் நுண்ணுயிர்கள் எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் இருந்தால் தைராய்டு பிரச்னை மட்டுமல்ல மற்ற ஹார்மோன் பிரச்னைகள்கூட வராமல் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இதில், தைராய்டு வந்த பின்பும் குணமாவதற்கு வாயப்பிருக்கிறது.
சித்த மருத்துவம் என்று எடுத்துக்கொண்டால், காயகல்ப மூலிகைகள் என்று சொல்லக்கூடிய துளசி, அமுக்கிரா, மஞ்சள், நெல்லி, மஞ்சள் கரிசலாங்கண்ணி ஆகியவை உங்கள் உணவில் இருப்பதுபோல பார்த்துக் கொள்ளுங்கள்.

போன தலைமுறை சமையல்கட்டில் இருந்த கடற்பாசி இப்போது இல்லை. குழம்பில் போட, தாளிக்க என்று நம் பாட்டிமார்கள் பயன்படுத்தி வந்த கடற்பாசியும் தைராய்டை குணமாக்குவதில் சிறந்த பங்கு வகிக்கிறது. தவிர கடற்படு திரவியங்கள் என்று சொல்லப்படுகிற சில தாது உப்புகளும் தைராய்டை குணப்படுத்துவதில் சிறந்த பங்கு வகிக்கின்றன.
இந்தத் தீர்வுகள் எல்லாம் நபருக்கு நபர் மாறுபடும். உணவு, வாழ்வியல் மாற்றம், இவற்றுடன் சித்த மருந்துகளும் எடுத்துக்கொண்டால் பெரும்பாலானவர்களுக்கு தைராய்டை குணப்படுத்தி விடலாம்.''
''ஆயுர்வேதத்தை பொருத்தவரை உடலில் வரக்கூடிய எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணம். உடலில் இருக்கிற கழிவு என்கிற நச்சுத்தன்மைதான். அதனால், சீரற்ற தைராய்டுக்கான மருத்துவம் என்று எடுத்துக்கொண்டால், முதலில் சம்மந்தப்பட்டவர்களின் உடலை சுத்தி எனப்படுகிற கழிவு நீக்கம் செய்வோம். இது சம்பந்தப்பட்டவர்களின் வயது, உடல் எடை, தாங்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

இதில் நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிற ஒரு தகவல் என்னவென்றால், தைராய்டு பிரச்னையை அவரவர் உடல் தன்மைக்கு ஏற்ப உணவின் மூலமே கட்டுக்குள் கொண்டு வர முடியும் அல்லது குணப்படுத்த முடியும். ஹார்மோன் பிரச்னை இருப்பவர்கள் சூர்ய அஸ்தமனத்திற்கு பிறகு உணவு சாப்பிடக்கூடாது என்பதுதான் ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படை. இது தைராய்டுக்கும் பொருந்தும். மருந்து கட்டாயம் தேவைப்படுகிறது என்பவர்களுக்கு மட்டுமே கஷாயம், சூரணம் போன்றவற்றை வழங்குவோம்.
தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையைக்கேட்டு அவர்களின் உடல் தன்மைக்கேற்ப உணவு முறையையும் வாழ்வியல் முறையையும் உறுதியாக கடைபிடித்து வந்தால், பெரும்பாலானவர்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் மட்டுமல்ல வேறு எந்த மருந்துகளுமே தேவைப்படாது என்பதுதான் உண்மை.''

''தைராய்டில் ஹைபோ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என இரண்டு வகைகள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஹைப்போ தைராய்டு இருப்பவர்களுக்கு உடல் குளிர்ச்சித்தன்மையுடன் இருக்கும்; உடல் எடை கூடும்; மந்தத் தன்மையுடன் இருப்பார்கள். ஹைப்பர் தைராய்டு இருப்பவர்களுக்கு உடலில் சூடு அதிகமாக இருக்கும்; உடல் எடை குறையும்; பதற்றமாகவே இருப்பார்கள்.
அடுத்து ஆசனங்கள்... தைராய்டு சுரப்பை சீர்ப்படுத்துவதில் முக்கியமான ஆசனம் விபரீதகரணி. அடுத்தடுத்த இடங்களில் இருப்பவை உஸ்ட்ராசனம், சர்வாங்காசனம், புஜங்காசனம்.
இயற்கை மருத்துவத்தில் யோகாசனம் வழியாகத்தான் தைராய்டு பிரச்னையை 80 சதவிகிதம் கட்டுக்குள் வைக்கிறோம் மற்றும் குணப்படுத்துகிறோம்.

அடுத்தது சின் முத்திரையும், ஜலந்தர பந்தாவும். சின் முத்திரை மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ஜலந்தர பந்தாவை ஆங்கிலத்தில் இதை 'Chin Lock' என்று கூறுவார்கள். இது, கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் உள்ள இறுக்கத்தை தளர்த்தி, தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்கும்.
ஹைப்போ தைராய்டு இருப்பவர்கள், கழுத்தில் 'Cold neck pack' போட வேண்டும். ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள் கழுத்தில் 'Warm neck pack' போட்டு வந்தால் தைராய்டு கட்டுக்குள் இருக்கும்.
அடுத்தது மசாஜ். ஹைப்போ தைராயடு இருப்பவர்களுக்கு தொண்டைப்பகுதியில் அரோமா ஆயில் தடவி மென்மையாக மசாஜ் செய்வோம். ஹைப்பர் தைராய்டு இருப்பவர்களுக்கு கழுத்து மற்றும் முதுகெலும்பு பகுதியில் மசாஜ் செய்வோம். இது அவர்களுக்கு இருக்கக்கூடிய ஆங்சட்டியை சரி செய்யும்.
இவை தவிர, உணவில் போதுமான செலினியம், அயோடின், வைட்டமின் பி 12 சத்து, புரோபயோட்டிக் இருக்க வேண்டும். தினமும் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்க வேண்டும். உடலில் போதுமான இரும்புச்சத்தும் இருக்க வேண்டும். கல் உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். வாழைப்பழமும் முக்கியம்.
சுகர் ஃப்ரீ, குளூட்டன் ஃப்ரீ உணவுகளுக்கு மாறுங்கள். சரிவிகித உணவு சாப்பிடாதவர்களுக்கும் தைராய்டு பிரச்னை வரலாம் என்பதால், உங்கள் உணவில் கவனமாக இருங்கள்.''
தைராய்டு ரிவர்ஸ் ஆகட்டும்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...