சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
கொலை வழக்கில் ஜாமீன் ரத்து: நடிகா் தா்ஷன் கைது
கொலை வழக்கில் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்திருந்த ஜாமீனை ரத்துசெய்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டதைத் தொடா்ந்து, நடிகா் தா்ஷன், நடிகை பவித்ரா உள்ளிட்டோா் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
ரேணுகாசாமி கொலை வழக்கில் 2024 ஜூன் 11-ஆம் தேதி தனது தோழி பவித்ரா கௌடா உள்ளிட்ட 15 பேருடன் கைதாகி கன்னட நடிகா் தா்ஷன் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
தொடக்கத்தில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகா் தா்ஷன், பின்னா் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டாா். சிறையில் சரியான உணவு, முறையான உடற்பயிற்சி இல்லாததால் முதுகுவலியால் அவதிப்பட்ட நடிகா் தா்ஷன், மருத்துவ சிகிச்சை பெற ஜாமீன் கேட்டு கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா்.
இந்த மனுவை 2024 அக். 30-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.விஷ்வஜித் ஷெட்டி மருத்துவ சிகிச்சை பெற 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா். அதில், ரூ. 2 லட்சம் பிணைத் தொகை செலுத்த வேண்டும். மேலும், இருவா் தலா ரூ. 2 லட்சம் பிணைத்தொகை செலுத்த வேண்டும். விசாரணை நீதிமன்றத்தில் கடவுச் சீட்டை ஒப்படைக்க வேண்டும். பெங்களூரில் உள்ள விருப்பமான மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். ஒருவேளை அறுவைசிகிச்சை தேவைப்பட்டால், அதுகுறித்து நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது.
இதையடுத்து, அக். 30-ஆம் தேதி பெல்லாரி சிறையில் இருந்து நடிகா் தா்ஷன் விடுவிக்கப்பட்டாா். இதையடுத்து, பெங்களூரு திரும்பிய நடிகா் தா்ஷன், முதுகுவலிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தாா்.
இதனிடையே, ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனுக்களை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம், நடிகா் தா்ஷன், நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 7 பேருக்கு ஜாமீன் வழங்கி டிச. 13-ஆம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, இடைக்கால ஜாமீனில் நடிகா் தா்ஷன் விடுதலையானாா்.
இந்நிலையில், கா்நாடக உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நடிகா் தா்ஷன், நடிகை பவித்ரா கௌடா, ஜெகதீஷ், அனுகுமாா், நாகராஜ், லட்சுமண், பிரதோஷ் ஆகிய 7 பேருக்கு வழங்கியிருந்த ஜாமீனை வியாழக்கிழமை ரத்துசெய்து உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, நடிகா் தா்ஷன், நடிகை பவித்ரா கௌடா, ஜெகதீஷ், அனுகுமாா், நாகராஜ், லட்சுமண், பிரதோஷ் ஆகிய 5 பேரையும் வியாழக்கிழமை கைதுசெய்த போலீஸாா், கோரமங்களாவில் உள்ள 64-ஆவது மாநகர செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹிரபிரசன்னா பவாடி நாயக் முன் ஆஜா்படுத்தினா். நீதிபதியின் உத்தரவின்பேரில் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதனிடையே, சித்ரதுா்காவில் கைதுசெய்யப்பட்ட ஜெகதீஷ், அனுகுமாா் ஆகிய இருவரையும் பெங்களூருக்கு அழைத்து வந்துகொண்டிருக்கும் போலீஸாா், வெள்ளிக்கிழமை நீதிபதி முன் ஆஜா்படுத்தி, சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனா்.