'மீண்டும் தே.ஜ கூட்டணியில் ஓபிஎஸ்' - பாஜக வியூகம் கைகொடுக்குமா?
அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட பிறகு தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைத் தொடங்கினார், ஓ.பி.எஸ். பா.ஜ.க தலைமையிலான தே.ஜ கூட்டணியில் இணைந்து செயல்பட்டார். ஆனால் அவருக்குக் கூட்டணியில் உரிய அங்கீகாரம் கிடைக்காததால் அதிருப்தியிலிருந்துவந்தார். பா.ஜ.க-வின் உயர்மட்ட தலைவர்களைச் சந்திக்கப் பலமுறை முயன்றும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்தச்சூழலில்தான் சமீபத்தில் தமிழகத்திற்குப் பிரதமர் மோடி வந்திருந்தார். அவரை சந்திக்க நேரம் கேட்டு ஓ.பி.எஸ் கடிதம் எழுதினார். இந்த முறையும் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தே.ஜ கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
அந்தநேரத்தில் முதல்வர் ஸ்டாலினை இரண்டு முறை சந்தித்துப் பேசினார். இதையடுத்து தி.மு.க கூட்டணிக்கு ஓபிஎஸ் செல்வார் எனப் பலரும் பேசத் தொடங்கினர். அப்போது, "என்னிடம் கேட்டிருந்தால் பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்" எனத் தமிழக பாஜக தலைவர் நயினார் பேட்டி கொடுத்தார்.
அதற்கு ஓபிஎஸ், "குறுஞ்செய்தி, தொலைப்பேசி வாயிலாகவும் நான் பலமுறை நயினாரைத் தொடர்பு கொண்டபோதும் எனக்கு அவர் பதிலளிக்கவில்லை. நயினார் நாகேந்திரன் உண்மையைப் பேச வேண்டும்" எனக் காட்டமாகப் பதிலளித்தார். மேலும் மெசேஜ் ஆதாரத்தையும் வெளியிட்டார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு எந்த காலத்திலும் பா.ஜ.க கூட்டணிக்குச் செல்ல மாட்டோம் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர். இந்தச்சூழலில் மீண்டும் தே.ஜ கூட்டணிக்கு ஓபிஎஸ்யை கொண்டுவருவதற்கான முயற்சி நடப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், "தே.ஜ கூட்டணியில் நிறையக் குழப்பங்கள் இருக்கின்றன. கடந்த தேர்தலில் கூட்டணியிலிருந்த பாமக தற்போது பிளவு பட்டிருக்கிறது. தே.மு.தி.க என்ன முடிவு எடுக்கும் எனத் தெரியவில்லை. எனவேதான் ஓபிஎஸ்யை மீண்டும் தே.ஜ கூட்டணிக்குக் கொண்டுவர அண்ணாமலை தரப்பு தீவிரமாக முயன்று வருகிறதாம். சமீபத்தில் பா.ஜ.க-வின் அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது அவருடன் ஓ.பி.எஸ்யை சந்திக்க வைக்க அண்ணாமலை தரப்பு தீவிரமாக முயன்றது.
ஆனால், 'நான் கூட்டணியிலிருந்து வெளியில் வந்துவிட்டேன். இப்போது சந்தித்தால் சரியாக இருக்காது' என, ஓ.பி.எஸ் சொல்லிவிட்டார். இதையடுத்து டி.டி.வி. தினகரன் மூலமாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போதும் ஓ.பி.ஸ் ஓகே சொல்லவில்லை. இதனால் அண்ணாமலையின் முயற்சி எடுபடவில்லை.
பிறகு கமலாலயத்தில் மையக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் நயினார், தமிழிசை, அண்ணாமலை, வானதி, பொன்னார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தலைவர்கள், "கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. கடந்த தேர்தலில் பா.ம.க நம்முடன் இருந்தது. ஆனால், தற்போது ராமதாஸ் வெற்றிகரமான கூட்டணி அமைப்பதாகப் பேசி வருகிறார். தே.மு.தி.க-வின் நிலைப்பாடு தெளிவாக இல்லை. ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியை விட்டு வெளியேறியது நமக்கு ஒரு வகையில் பலவீனமாக உள்ளது. எனவே, அவர்கள் அனைவரையும் நமது கூட்டணிக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும்" என்றனர். ஆனால் இதற்கு பி.எல் சந்தோஷ் பெரிதாக எந்த பதிலும் சொல்லவில்லை.
அதற்குள் கூட்டணிக்கு அண்ணாமலை தரப்பு அழைத்த தகவல் ஓ.பி.எஸ் தரப்புக்குச் சென்றது. 'டெல்லி தலைவர்கள் யாரும் நம்மை அழைத்துப் பேசவில்லை. அண்ணாமலைக்கு எந்த பொறுப்பும் கொடுக்காதபோது நாம் அவர் சொல்வதைக் கேட்டால் சரியாக இருக்காது. ஒருபோதும் பா.ஜ.க பக்கமே செல்ல வேண்டாம். நம்மை ரொம்பவே அவமானப்படுத்தி விட்டார்கள். இப்படியான சூழலில் மீண்டும் அங்குச் சென்றால் அவமானம்தான் பரிசாகக் கிடைக்கும். எனவே தி.மு.க பக்கம் சென்றால்தான் நாம் பா.ஜ.க, எடப்பாடிக்குத் தரப்புக்குப் பதிலடி கொடுத்ததுபோல இருக்கும்' எனக் கொதித்திருக்கிறார்கள்.
இதையடுத்துதான் ஒரே முடிவாக பா.ஜ.க பக்கம் செல்லக்கூடாது என்கிற மனநிலையில் ஓ.பி.எஸ் இருக்கிறார். இதற்கிடையில் விரைவில் ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி ஐயப்பனும் விரைவில் முதல்வரைச் சந்திக்கத் தயாராகி வருகிறார்கள். வைத்தியலிங்கம் மட்டும் தி.மு.க பக்க செல்ல தயக்கம் காட்டி வருகிறார். அ.தி.மு.க-வில் நல்ல அங்கீகாரம் கிடைத்தால் அங்கேயே சென்றுவிடலாம் என திட்டமிடுகிறாராம்" என்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "தே.ஜ கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு ஓபிஎஸ்க்கு திமுக, விஜய் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. அதேநேரத்தில் தே.ஜ கூட்டணிக்கும் மீண்டும் செல்லலாம். ஆனால் அவர் இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க மாட்டார். டிசம்பரில்தான் எங்குச் செல்வது என முடிவு எடுப்பார். ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் மனோஜ் பாண்டியன் தி.மு.க-விடம் பேசி வருகிறார். ஆலங்குளம் தொகுதி கிடைத்தால் உடனடியாக அறிவாலயம் சென்றுவிடுவார். உசிலம்பட்டி ஐயப்பனும் முதல்வர் தரப்பில் பேசி வருகிறார். வைத்தியலிங்கம் மட்டும் மீண்டும் அ.தி.மு.க பக்கம் செல்லலாம் என யோசித்து வருகிறார். அதேநேரத்தில் பா.ஜ.க-வும் தீவிரமாக ஒபிஸ்யை கையில் எடுக்க முயன்று வருகிறது. ஆனால் கைகூடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றனர்.