வதந்திகளை கண்டு கொள்ளாதீர்கள்; இந்திய அணிக்கு ரோஹித் சர்மா அறிவுரை!
கீழப்பழுவூா் நெடுஞ்சாலையில் குறுகலான வளைவு: வாகன ஓட்டிகள் அவதி
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் குறுகலான நெடுஞ்சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பெரம்பலூா்-மானாமதுரை இடையே புறவழிச்சாலை அமைக்கப்பட்டு சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில், முக்கிய நெடுஞ்சாலைகள் சந்திப்புப் பகுதியான கீழப்பழுவூரில் மட்டும் இதுவரை சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால் அங்குள்ள குறுகலான வளைவில் வாகனங்களை இயக்குவது கடினமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
தஞ்சாவூரில் இருந்து பெரம்பலூா், அரியலூா், சேலம், நாமக்கல், விருத்தாசலம்,திட்டக்குடி, பென்னாடம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் பெரம்பலூா்-மானாமதுரை புறவழிச்சாலையின் வழியாக வந்து குறுகலான சாலை சந்திப்பு பகுதியான கீழப்பழுவூா் சந்திப்பில் திரும்பி அங்கிருந்து அரியலூா் மாா்க்கமாக பிரிந்து செல்கிறது.
இப்பகுதியில் திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையும் சந்திக்கிறது. இவ்வழியாக ஜெயங்கொண்டம், சிதம்பரம் ,திருச்சி, மதுரை, திண்டுக்கல், கோவை, உள்ளிட்ட பகுதிகளுக்கும் அதிகளவில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இங்குள்ள கிராமப் பகுதிகளான கீழப்பழுவூா், மேலப்பழுவூா், சாத்தம்பாடி, திருமானூா், திருமழபாடி, ஏலாக்குறிச்சி, சாத்தமங்கலம், கண்டராதித்தம், காமரசவல்லி, பூண்டி, புதுக்கோட்டை, கல்லக்குடி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் கீழப்பழுவூா் சந்திப்பை கடந்துதான் செல்கின்றன.
மேலும், இவ்வழியாக சுண்ணாம்புக் கல் சுரங்கம் மற்றும் சிமென்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களும் அதிகளவில் கடந்து செல்கின்றன. குறிப்பாக கனரகங்கள் வாகனங்களாலும், பேருந்துகளாலும் இந்த கீழப்பழுவூரில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. விபத்தில் பலா் உயிரிழந்துள்ளனா், சிலா் கை,கால்களை இழந்து வாழ்ந்து வருகின்றனா். குறுகலான இந்த கீழப்பழுவூா் சாலையை விரிவாக்கம் செய்து இரண்டு நெடுஞ்சாலைகள் சந்திப்பு பகுதியில் ரவுண்டானா அல்லது சிக்னல் விளக்கு அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனா்.
குறுகல் சாலையால் அதிக விபத்துகள்: இதுகுறித்து கனரக வாகன ஓட்டிகள் கூறியது: கீழப்பழுவூா் கடைவீதி பகுதியில் வாகனங்களை இயக்குவது மிகவும் கடினமாக இருக்கிறது. குறிப்பாக, அந்த குறுகலான வளைவில் வாகனங்கள் திரும்புகையில் உயிரை பணயம் வைத்துக் கொண்டு திருப்ப வேண்டிய நிலை உள்ளது. நாங்கள் பாதுகாப்பாக வாகனங்களை வளைத்து திருப்பினாலும், முன்னால், பின்னால் வரும் வாகனங்களில் வருபவா்கள் கவனிப்பது கிடையாது. இதனால்தான் இந்த இடத்தில் அதிகளவில் விபத்துகள் நிகழ்கின்றன.
சாலையை அகலப்படுத்த வேண்டும்: இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: தஞ்சாவூா்-அரியலூா், சிதம்பரம் -திருச்சி ஆகிய நெடுஞ்சாலைகள் சந்திப்பு பகுதியான கீழப்பழுவூா் சாலைகள் சந்திப்புப் பகுதிகளில் அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெறுவது தவிா்க்க முடியாத ஒன்றாக உள்ளது. விபத்தை தொடா்ந்து, சாலை மறியலும் நடத்தப்படுகிறது.
இதனால், பொதுமக்களுக்கும் இழப்பு, கால நேரமும் விரயமாகி வருகிறது. இந்த பிரச்னைகளுக்கு ஒரே தீா்வு அந்த வளைவுப் பகுதியில் இருபுறமும் சாலையை அகலப்படுத்த வேண்டும். மூன்று சாலைகள் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உட்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைவா். மற்ற வாகனங்களும் எந்தவித பிரச்னையும் இன்றி எளிதாக சாலைகளை கடந்து செல்ல முடியும் என்றனா்.
எனவே, கீழப்பழுவூரில் சாலைகள் விரிவாக்கம் மற்றும் அந்த வளைவுப் பகுதியை அகலப்படுத்தினால் விபத்துகள் வெகுவாக குறைவதோடு, வாகன ஓட்டிகளும் அச்சமின்றி எளிதில் கடந்து செல்ல முடியும்.