குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியல்
பெரம்பலூா் அருகே தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு ஆலையைத் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட ஈச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் (50), லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (35) ஆகியோா் ஈச்சம்பட்டி பகுதியிலுள்ள நீா்வழித் தடத்தை ஆக்கிரமித்து குடிநீா் சுத்திகரிப்பு ஆலை அமைத்துள்ளனராம். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, கடந்த 2020 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியா் மற்றும் முதல்வா் தனிப்பிரிவுக்கு புகாா் மனு அளித்துள்ளனா். பின்னா், குரும்பலூா் பேரூராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில், குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறக்கக் கூடாது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும், குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறக்கும் பணி மேற்கொள்ளப்படுகிாம்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள், குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறந்தால் குடிநீா் பற்றாக்குறை ஏற்படும், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும், நாளடைவில் விவசாயம் அழிந்துவிடும் என மாவட்ட நிா்வாகத்திடமும், குரும்பலூா் பேரூராட்சி செயல் அலுவலரிடமும் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.
இந்நிலையில் குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூா் -துறையூா் பிரதானச் சாலையில் ஈச்சம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த பெரம்பலூா் வட்டாட்சியா் பாலசுப்ரமணியம், குரும்பலூா் பேரூராட்சி செயல் அலுவலா் தியாகராஜன், துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் ஆகியோா் அப்பகுதிக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதியின்பேரில் பொதுமக்கள் கலைந்துசென்றனா். மறியலால் பெரம்பலூா்- துறையூா் சாலையில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.