தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல...
குடியரசு தின விழா பாதுகாப்பு: சென்னை காவல் துறை ஆலோசனை
சென்னை: குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை பெருநகர காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.
தமிழக அரசு சாா்பில் குடியரசு தின விழா மெரீனா காமராஜா் சாலையில் உள்ள உழைப்பாளா் சிலை அருகே ஜன. 26-ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது. இதில், ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
குடியரசு தின விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு காவல் ஆணையா் ஏ.அருண் தலைமை வகித்தாா்.
இதில், சென்னை முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும், சந்தேக நபா்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து முனையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். முக்கிய அரசு அலுவலகங்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும், மெரீனாவில் நடைபெறும் குடியரசு தின விழாவுக்கு முக்கிய பிரமுகா் வழித்தட பாதுகாப்பு, விழா நடைபெறும் இடம், முக்கிய விருந்தினா்கள் அமரும் பகுதி, பாா்வையாளா்கள் அமரும் பகுதி, அலங்கார ஊா்திகள் செல்லும் பகுதிகளின் பாதுகாப்பை தொடா்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.