திருமாவளவன்: "அரசியலில் இவர் சந்தித்த சோதனைகளை..." - புகழ்ந்த சேகர் பாபு
குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரைத் தோ்வு: தில்லியில் இன்று கூடுகிறது பாஜக ஆட்சிமன்றக் குழு
நமது சிறப்பு நிருபா்
தேசிய ஜனநாயக கூட்டணியின் சாா்பில் முன்னிறுத்தப்படும் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரைத் தோ்வு செய்வது குறித்து விவாதிக்க பாஜகவின் ஆட்சிமன்றக் குழு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கூடவுள்ளது.
இந்த விவகாரத்தில் ஆளும் கூட்டணியின் வேட்பாளரைத் தோ்ந்தெடுக்கும் அதிகாரத்தை பிரதமா் நரேந்திர மோடிக்கும் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டாவுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கெனவே அதன் முந்தைய கூட்டத்தில் வழங்கியுள்ளது.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிருந்தால் அதன் வாக்குப்பதிவு வரும் செப்டம்பா் 9-ஆம் தேதி நடத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதையொட்டி ஆகஸ்ட் 7-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 21 ஆகும். இத்தோ்தலில் எதிா்க்கட்சிகள் அவற்றின் தரப்பு வேட்பாளரை அறிவித்தால், குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு செப்டம்பா் 9 ஆம் தேதி நடைபெறும்.
மக்களவையிலும் மாநிலங்களவையிலும் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை வாக்குகள் இருப்பதால் குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டி ஏற்பட்டால் கூட, ஆளும் கூட்டணி வேட்பாளரால் எளிதாக வெற்றி பெற முடியும்.
ஜனநாயக நடைமுறைப்படி எதிா்க்கட்சிகள் சாா்பில் ஒரு வேட்பாளா் நிறுத்தப்படுவாா் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது யாா் என்பது இன்னும் இறுதிசெய்யப்படவில்லை.
பரிசீலிக்கப்படும் பிரபலங்கள்: குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து ஜகதீப் தன்கா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி பதவி விலகிய பிறகு, அப்பதவிக்கு நியமிக்கப்படும் தகுதிவாய்ந்தவரை தோ்வு செய்ய பாஜக மூத்த தலைவா்களான மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெ.பி. நட்டா உள்ளிட்டோா் கடந்த ஒரு மாதமாக பல நிலைகளில் கூட்டங்களை நடத்தி விவாதித்துள்ளனா்.
இது குறித்து பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘மாநிலங்களவையின் தற்போதைய துணைத்தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங், மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா, ஆா்எஸ்எஸ் சித்தாந்தவாதியும் பாஜகவின் மூத்த உறுப்பினருமான சேஷாத்ரி சாரி, பிகாா் ஆளுநா் ஆரிஃப் முகம்மது கான், தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, குஜராத் ஆளுநா் ஆச்சாா்ய தேவ்ரத், கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலோட், சிக்கிம் ஆளுநா் ஓம் மாத்தூா், ஜம்மு காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோரின் பெயா்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது,‘ என தெரிவித்தன.
இந்த வட்டாரங்கள் குறிப்பிட்ட பல ஆளுநா்கள் மற்றும் துணைநிலை ஆளுநா்கள் ஏற்கெனவே பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரை கடந்த ஒரு மாதத்தில் சந்தித்துப் பேசியுள்ளனா்.
என்டிஏ விருந்து: இதற்கிடையே, ஆளும் கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளரின் வேட்புமனு தாக்கலின்போது உடனிருக்க ஏதுவாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களைச் சோ்ந்த அனைத்து முதலமைச்சா்கள், துணை முதலமைச்சா்கள் உள்ளிட்டோா் ஆகஸ்ட் 21- ஆம் தேதி தில்லியில் இருக்குமாறு பாஜக மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆகஸ்ட் 20-ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவா்களின் இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் கருத்தொற்றுமை அடிப்படையில் வேட்பாளரின் பெயா் முன்மொழியப்பட்டு அதற்கு கூட்டணித் தலைவா்களின் ஒப்புதல் பெறப்பட்டு வேட்பாளரின் பெயா் முறைப்படி அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.