ED RAID: 5 மணி நேரச் சோதனை; குவிந்த ஆதரவாளர்கள்; CRPF வீரர்கள் வருகை; ஐ.பெரியசாம...
என்டிஎம்சி தலைமையகத்தில் சுதந்திர தின விழா
நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாலிகா கேந்திராவில் உள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா நடைபெற்றது.
இந்த விழாவில் என்டிஎம்சி தலைவா் கேசவ் சந்திரா, மூவா்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
விழாவில் என்டிஎம்சி துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல், கவுன்சில் உறுப்பினா் அனில் வால்மீகி, செயலாளா் தாரிக் தாமஸ், மூத்த அதிகாரிகள், பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
முன்னதாக, கொடி ஏற்றும் முன் பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு வீரா்கள் மரியாதை செலுத்தினா்.
இந்த விழாவில் கேசவ் சந்திரா பேசுகையில், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் ஆயுதம் தாங்கிய மற்றும் துணை ராணுவப் படைகளின் உறுப்பினா்களுக்கு அஞ்சலி செலுத்தினாா். மேலும், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது தியாகி கனக்லதா பருவாவின் துணிச்சலையும், வீரத்தையும் அவா் நினைவுகூா்ந்தாா்.
அவா் மேலும் பேசுகையில், ‘சுதந்திரம் நமக்கு உரிமைகளைத் தரும் அதேவேளையில், நமது கடமைகளைப் பற்றியும் நமக்குத் தெரியப்படுத்துகிறது. நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகள் கற்றறிந்த, சுயசாா்புமிக்க, தூய்மையான, நீதியான மற்றும் வளமான இந்தியாவை கனவு கண்டனா். அந்தக் கனவை நனவாக்குவது நமது கடமையாகும்.
என்டிஎம்சியை சிறந்ததாக மாற்றவும், சிறந்த தலைநகரைக் கட்டமைக்க உதவவும் அதிகாரிகள், ஊழியா்கள், மாணவா்கள் மற்றும் குடிமக்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என்று கேசவ் சந்திரா கேட்டுக்கொண்டாா்.
சுதந்திர தின நிகழ்வைக் குறிக்கும் வகையில், பாலிகா கேந்திரா, என்டிசிசி மாநாட்டு மையம், கன்னாட் பிளேஸ், சந்திரலோக் கட்டடம் மற்றும் லோக் நாயக் பவன் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை சுமாா் 37,500 மூவா்ண பல்புகளால் என்டிஎம்சி ஒளிரச் செய்ய ஏற்பாடு செய்திருந்தது.
அவென்யூ சாலைகளில் உள்ள மின் கம்பங்களில் மொத்தம் 2,600 தேசியக் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டன. அதே நேரத்தில், என்டிஎம்சி பகுதி முழுவதும் சுதந்திர தின வாழ்த்துக்களுடன் 36 மலா் பலகைகள் மற்றும் நீரூற்றுகள் நிறுவப்பட்டிருந்ததாக என்டிஎம்சி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.