ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
வதந்திகளை நம்பாதீர்கள்; திட்டமிட்டபடி நாளை(ஆக. 17) பொதுக்குழு நடைபெறும்: ராமதாஸ்
விழுப்புரம் பட்டானூரில் திட்டமிட்டபடி நாளை(ஆக. 17) சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இருவரும் பல வாரங்களாக சந்திக்காமல் உள்ள நிலையில், ராமதாஸின் மனைவியும் அன்புமணியின் தாயாருமான சரஸ்வதியின் பிறந்தநாளையொட்டி, தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி நேற்று(ஆக. 15) சென்றுள்ளார்.
தாயாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராமதாஸுடன் அன்புமணி பங்கேற்ற புகைப்படங்களும் வெளியாகின.
இந்நிலையில் ராமதாஸ், அன்புமணி இருவரும் பேசியதாகவும் நாளை ராமதாஸ் கூட்டியுள்ள சிறப்பு பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ராமதாஸ், திட்டமிட்டபடி நாளை (ஆகஸ்ட் 17) சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை 17.08.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பாண்டிச்சேரி அருகில் உள்ள சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் வதந்தி பரப்புவதாக செய்தி வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். எனது தலைமையில் நாளை 17.08.2025 ஞாயிற்றுக்கிழமை பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை.
பொதுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டியவர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.