Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்
"நீங்கள் துணை முதல்வராக இருந்தபோது EPS-ன் ஆளுமை பற்றித் தெரியாதா?" - OPSக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தலைமைப் பண்பு இல்லையென்று, ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் விமர்சித்திருந்த நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் எதிர்வினையாற்றியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள எடப்பாடி பழனிசாமியின் நான்காம் கட்ட பிரசார பயணத்திற்கு வீட்டுக்கு வீடு கடிதம் கொடுத்து அழைப்பு விடுக்கும் பணியை திருமங்கலம் தொகுதியில் தொடங்கியுள்ளார் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தைக் கடந்த ஜூலை மாதம் கோவையில் தொடங்கிய எடப்பாடி பழனிசாமியின் நான்காம் கட்ட எழுச்சிப் பயணம் மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
மதுரை மாவட்டம் முழுவதுமுள்ள மக்களைப் பங்கேற்கச் செய்யும் வகையில் கிராமம் கிராமமாக வீடு, வீடாகச் சென்று கடிதம் கொடுத்து அழைக்க உள்ளோம்.
தூய்மைப் பணியாளர்கள் கைதில் திமுக அரசு அடக்குமுறையைக் கையாண்டுள்ளது. தூய்மைப் பணியில் இவர்கள் ஈடுபடவில்லை என்றால் தமிழகம் என்னவாகும்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது வாக்குறுதி கொடுத்துவிட்டு இப்போது தேசவிரோத குற்றவாளிகளைப் போல நடத்தியுள்ளனர். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்
எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணம் வெற்றி பெற்றுள்ளதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஓபிஎஸ் விமர்சனம் செய்கிறார். அதிமுக தொண்டர்கள் குறித்துக் கவலைப்படும் ஓபிஎஸ், ஒரு நிமிடம் யோசித்திருந்தால் அதிமுகவை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்டு இருக்க மாட்டார்.

இன்றைக்கு ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் பற்றிக் கவலைப்படுவதற்கு முன்பாக தன்னை வளர்த்த இரட்டை இலை சின்னத்தை நாம் எதிர்த்து நின்றபோது, கட்சியின் எதிர்காலம், தொண்டர்கள் எதிர்காலம் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்திருந்தால் இந்த இயக்கத்திற்கு எதிராகத் தடைகள், சத்திய சோதனைகளை நாம் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
தன்னை அடையாளம் காட்டிய இயக்கத்திற்கு நன்றியோடு எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டிய வழியில் நாம் சென்றிருக்கிறோம். எத்தனை முறை தடம் புரண்டு இருக்கிறோம் என்பதை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும். எட்டு கோடி தமிழர்களின் நம்பிக்கையாகவும், இரண்டரை கோடித் தொண்டர்களின் காவல் தெய்வமாக இருக்கிற எடப்பாடி பழனிசாமியின் தாயன்பால் ஓபிஎஸ் இன்றைக்கு விரக்தியில் பொறாமைப்படுகிறார்
எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையை தமிழ்நாட்டு மக்கள், அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொண்டதால் அவரை முதலமைச்சர் வேட்பாளராக ஓபிஎஸ் முன்மொழிந்தார். எடப்பாடியாரை முன்மொழிந்துதான் தேர்தலைச் சந்தித்தார். எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த போதுதான் நான்கரை ஆண்டுக்காலம் ஓபிஎஸ், துணை முதலமைச்சராகப் பணியாற்றினார். அப்போதெல்லாம் எடப்பாடியாரின் ஆளுமை பற்றி அவருக்குத் தெரியாதா?

ஒபிஎஸ்ஸின் கருத்துக்கள் அவருடைய இயலாமையைக் காட்டுகிறது, தடம் புரண்டு சென்றவரின் கருத்துக்களை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒபிஎஸ் என்றும் அண்ணன்தான். ஆனால், அனுதாபம் தேடி திசை திருப்புகிற அவருக்குத் தோல்விதான் கிடைக்கும்.
தடம் புரண்டவர்கள் தடம் மாறியவர்களின் கருத்துக்களை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்பது ஓபிஎஸ் நன்றாகத் தெரியும். எடப்பாடியார் எழுச்சி பயணம் வெற்றி பயணத்தில் இரவு 11 மணிக்கு மக்கள் காத்திருந்து அவரை ஆரவாரத்துடன் வரவேற்பதுதான் ஓபிஎஸ்ஸின் கேள்விக்கும், அறிக்கைக்கும் பதிலாக உள்ளது" என்றார்.