Mumbai Rain: விமானம், வாகன போக்குவரத்து பாதிப்பு; நிலச்சரிவால் இருவர் பலி; கனமழையிலும் நடந்த உறியடி
மும்பையில் நேற்று தொடங்கிக் கன மழை பெய்து வருகிறது. இம்மழையால் மும்பையின் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து முடங்கி இருக்கிறது. காந்தி நகர், கிங்சர்க்கிள், சயான், குர்லா, செம்பூர், அந்தேரி போன்ற பகுதியில் தெருக்களில் மழை நீர் வெள்ளமாக ஓடியது.
சயான் சண்முகானந்தா ஹால் செல்லும் சாலையில் ஒன்றரை அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கிக் காணப்பட்டது. ரயில் தண்டவாளத்திலும் தண்ணீர் தேங்கி ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஆங்காங்கே பழுதாகி வரிசையாக நிற்பதைக் காண முடிந்தது.
மழை தொடர்பாக மும்பை போலீஸார் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், ''பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம். தெருக்களில் மழைநீர் தேங்கி இருக்கிறது. வெளிச்சம் குறைவாக இருக்கிறது" என்று எச்சரித்திருந்தது.

மேற்கு புறநகர்ப் பகுதியில் இரவு முழுவதும் 216 மிமீ அளவுக்கு மழை பெய்திருந்தது. மும்பை நகரப் பகுதியில் 5 மணி நேரத்தில் 130 மிமீ அளவுக்கு மழை பெய்தது. மழையால் ஏற்பட்டுள்ள அவசர நிலையைச் சமாளிக்க போலீஸாரும், மும்பை மாநகராட்சியும் தயார் நிலையில் இருக்கின்றனர்.
மும்பை மற்றும் அருகில் உள்ள ராய்கட் பகுதியில் கனமழை பெய்யும் என்று ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது மும்பை வானிலை ஆய்வு மையம். தொடர் மழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விக்ரோலியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் வீடு ஒன்றின் மீது இடிபாடுகள் விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் காயம் அடைந்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இன்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி காலையிலிருந்து உறியடி நிகழ்ச்சி மும்பை முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
உறியடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கோவிந்தாக்களுக்கு மாநில அரசு காப்பீடு வழங்கி இருக்கிறது. கனமழையையும் பொருட்படுத்தாமல் கோவிந்தா மண்டல்கள் சார்பாக நூற்றுக்கணக்கானோர் கூட்டம் கூட்டமாகச் சென்று மும்பை முழுவதும் உறியடியில் ஈடுபட்டனர்.

உறியடியில் ஈடுபட்டு அதில் தயிர்ப் பானையை உடைப்பவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பல லட்சம் பரிசுகளை அறிவித்து இருந்தனர். தானேயில் அமைச்சர் பிரதாப் சர்நாயக் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த உறியடி நிகழ்ச்சியில் கோவிந்தாக்கள் 10 அடுக்கு பிரமிடு அமைத்து தயிர்ப் பானையை உடைத்தனர். அவர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. 10 அடுக்கு பிரமிடு அமைத்து தயிர்ப் பானை உடைத்தது உலக சாதனையாகக் கருதப்படுகிறது.