உங்கள் கையில் ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா? இதைத் தெரிந்துகொள்வது அவசியம்!
Nilgiri: ரெட் அலெர்ட்; பள்ளிகளுக்கு விடுமுறை, சுற்றுலாத்தலங்கள் மூடல்; அவசரகால எண்கள் வெளியீடு
நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக மழை மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் என மாவட்டம் முழுவதும் பரவலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக அதிக கனமழை பொழிவதற்கான வாய்ப்பு இருப்பதாக ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கு மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களையும் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு, " இந்திய வானிலை ஆய்வு மையம் மூலம் நீலகிரிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக அளவு மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளதால் மண்சரிவு, மரங்கள், மரக்கிளைகள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இன்று (05.08.2025) ஒரு நாள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

பேரிடர் அபாயம் நிறைந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புக்கள் ஏற்பட்டால் உடனுக்குடன் சீரமைக்கும் வகையில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் 24 மணி நேரமும் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, அரக்கோணத்தில் இருந்து தேசிய மீட்பு படையைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் நீலகிரிக்கு வருகைத் தர உள்ளனர்.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படும். மேலும், மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில்; செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், வாட்ஸ் அப் எண் 9488700588 - ற்கும் தகவல் அளிக்கலாம். மேலும், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஊட்டி கோட்டத்திற்கு 0423-2445577, குன்னூர் கோட்டத்திற்கு 0423-2206002, கூடலூர் கோட்டத்திற்கு 04262-261296, ஊட்டி வட்டத்திற்கு 0423-2442433, குன்னூர் வட்டத்திற்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்திற்கு 04266-271718, குந்தா வட்டத்திற்கு 0423-2508123, கூடலூர் வட்டத்திற்கு 04262-261252, பந்தலூர் வட்டத்திற்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம். இந்த தொலைபேசி எண்களில் பெறப்பட்ட தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இக்கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும்" என தெரிவித்துள்ளார்.