மெட்டபாலிக் சிண்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னெ...
உங்கள் கையில் ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா? இதைத் தெரிந்துகொள்வது அவசியம்!
இந்தியாவில் 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை தற்போது புழக்கத்தில் உள்ளன. இதற்கு முன்பு 2000 ரூபாய் நோட்டுகளும் அதற்கு முன்பு ரூ.10,000 நோட்டுகளும் புழக்கத்தில் இருந்துள்ளன. ஒவ்வொரு ரூபாய் நோட்டுகளிலும் இந்தியாவின் மிக முக்கிய நினைவுச் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பு.
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவின் மைய வங்கியாகும்! 1934 - இல் இயற்றிய பிரிட்டிஷ் அரசின் சட்டப்படி 1935 - ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது ஐந்து இலட்சம் பங்குகளைக் கொண்ட ஐந்து கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கிதான் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது, புழக்கத்தில் விடுவது, மதிப்பிழக்கம் செய்வது உள்ளிட்ட முடிவுகளை எடுத்து அறிவிக்கிறது.
நாட்டில் தற்போது, நாசிக், மும்பை, ஹைதராபாத், தீவாஸ், ஹோசங்காபாத், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.
இதுவரை விலக்கிக் கொள்ளப்பட்ட ரூபாய் நோட்டுகள்!
10,000 ரூபாய் நோட்டு
1938 - 1954 ஆண்டுகளில் வெளியிடப்பட்டது. 1978-ஆம் ஆண்டு இந்த நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
5000 ரூபாய் நோட்டு
1949, 1954-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டது. 1978-இல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
1000 ரூபாய் நோட்டு
1938, 1954, 2000 ஆண்டுகளில் வெளியிடப்பட்டது. 1978 மற்றும் 2016 இல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
500 ரூபாய் நோட்டு
1987-இல் வெளியிடப்பட்டது. 2016-இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
2016-இல் விலக்கிக் கொள்ளப்பட்டு மீண்டும் புதிய வடிவில் 2016-இல் புதிய வடிவத்தில் வெளியிடப்பட்டது.
2000 ரூபாய் நோட்டு
2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் திரும்பப் பெறப்பட்டது.
புதிய நோட்டு!
200 ரூபாய் நோட்டு இத்தனை ஆண்டுகளில் புழக்கத்தில் இல்லாமல் 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டது. இந்திய வரலாற்றில் 200 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.
புதிய ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றிருக்கும் நினைவுச் சின்னங்கள்..
10 ரூபாயில் கோனார்க் சூரியனார் கோவில்
இந்த புதிய ரூபாய் நோட்டு 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புழக்கத்தில் விடப்பட்டது.
இந்தியாவின் பெருமைமிகு தளங்களில் சூரியனார் கோயிலும் ஒன்று. ஒடிசாவில் அமைந்திருக்கும் கோனார்க் சூரியனார் கோயிலின் புகைப்படம் பத்து ரூபாய் தாளில் இடம்பெற்றுள்ளது. இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய கட்டடக் கலையின் அற்புதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தளம் பழங்காலத்தில், சூரிய கடிகாரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
20 ரூபாய் தாளில் கைலாஷ் கோயில்
இந்த ரூபாய் நோட்டு 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கைலாஷ் கோயில் தூண்களில் ஒன்றுதான், 20 ரூபாய் தாளில் இடம்பெற்றுள்ளது. எல்லோரா குகைச் சிற்பங்களுக்குப் பெயர்போன கோயிலின் ஒரு தூண் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும்.
இந்தியாவின் மிகப்பெரிய ஒற்றைக்கல் கோயில் என்று அழைக்கப்படும் இது, கட்டடக்கலை நுணுக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
ஹம்பி இடம்பெற்றிருக்கும் 50 ரூபாய் நோட்டு
விஜயநகர பேரரசின் ஆட்சிக்காலத்தில், கட்டடக் கலை மிக முக்கியத்துவம் பெற்றிருந்ததற்கு பலச் சான்றுகள் உள்ளன. அதில், ரூ.50 தாளில் இடம்பெற்றிருக்கும் ஹம்பியில் அமைந்துள்ள விதலா கோயிலும் ஒன்று. ரூபாய் நோட்டில் இடம்பெற்றிருப்பது இந்தக் கோயிலில் அமைந்துள்ள கல்லில் செதுக்கப்பட்ட தேர்.
மிகப் புகழ்பெற்ற நினைவுச் சின்னங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. 50 ரூபாய் நோட்டு கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புழக்கத்தில் விடப்பட்டது.
நூறு ரூபாய் நோட்டு
குஜராத் மாநிலம் படானில் அமைந்துள்ள ராணி கி வாவ் என்ற படிக்கிணறுதான் நூறு ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ளது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக இது உள்ளது.
11ஆம் நூற்றாண்டின் மன்னர் பீம் தேவ் ஒன்றின் நினைவாக இது கட்டப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டு 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் புழக்கத்துக்கு வந்துள்ளது.
ரூ.200 நோட்டும் சாஞ்சி ஸ்தூபியும்
சாஞ்சி ஸ்தூபி பௌத்த நினைவுச் சின்னமாக மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி நகரில் வீற்றிருக்கிறது. இதுவும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளம்தான். பல்வேறு வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் இது உள்ளது. இதுவரை வரலாற்றில் இல்லாத நோட்டாக ரூ.200 கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ரூ.500 நோட்டும் தில்லி செங்கோட்டையும்
தில்லியின் அடையாளங்களில் முதன்மையானதாக இருக்கும் செங்கோட்டை, 500 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் இடம்பிடித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர நாளன்று, பிரதமர் இந்திய தேசியக் கொடியை செங்கோட்டையில் ஏற்றுவதைக் கொண்டே இதன் முக்கியத்துவம் புரிந்திருக்கும்.