ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!
தனி கொடி, நாணயம்... 125 ஏக்கர் காட்டுப் பகுதியை ஒரு புதிய நாடாக உருவாக்கிய 20 வயது இளைஞர் - எப்படி?
பிரிட்டனைச் சேர்ந்த 20 வயதான டேனியல் ஜாக்சன் என்பவர் தான் புதிய நாட்டை உருவாக்கியுள்ளார்.
குரோஷியாவுக்கும் செர்பியாவுக்கும் இடையேயான எல்லைப் பகுதியில், யாரும் உரிமை கோராத 125 ஏக்கர் காட்டுப் பகுதியில் ’வெர்டிஸ் சுதந்திர குடியரசு’ என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளார். இந்த நாட்டிற்கு சொந்தக் கொடி, அமைச்சரவை, நாணயம் மற்றும் 400 பதிவு செய்யப்பட்ட குடிமக்கள் உள்ளனர்.
ஆஸ்திரேலிய வம்சாவளியைக் கொண்ட ஜாக்சன், 2019 மே 30 அன்று வெர்டிஸை அதிகாரப்பூர்வமாக சுதந்திர குடியரசாக அறிவித்தார்.

இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆங்கிலம், குரோஷிய மற்றும் செர்பியா ஆகிய மொழிகள் உள்ளன. யூரோ நாணயமாகப் பயன்படுத்தப்படுகிறது. குரோஷியாவின் ஒசிஜெக் நகரிலிருந்து படகு மூலம் மட்டுமே வெர்டிஸை அடைய முடியும்.
நாடு உருவாக்கும் போது பலவிதமான சவால்கள் இருந்துள்ளன. 2023 அக்டோபர் மாதத்தில் , குரோஷிய காவல்துறை ஜாக்சனையும் சில குடியேறியவர்களையும் கைது செய்து, அவர்களை நாடு கடத்தியது.
குரோஷியாவிற்குள் நுழைய அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. “எங்களை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று கூறி மட்டுமே இப்படி நடவடிக்கை எடுத்தார்கள்” என கூறியிருக்கிறார் ஜாக்சன். தற்போது நாடு கடத்தப்பட்ட நிலையில், வெர்டிஸை தொலைவிலிருந்து நிர்வகித்து வருகிறார். குரோஷியாவுடன் அமைதியான உறவைப் பேண விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
வெர்டிஸ் குடிமகனாக யார் ஆகலாம்?
வெர்டிஸ் ஆரம்பத்தில் நான்கு பேருடன் தொடங்கியது, தற்போது 400 குடிமக்களைக் கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் குடியுரிமைக்கு ஆர்வம் காட்டியுள்ளனர். வெர்டிஸ் சொந்த கடவுச்சீட்டுகளை வழங்கினாலும், அவை சர்வதேச பயணத்திற்கு பயன்படுத்தப்படக் கூடாது என்று ஜாக்சன் எச்சரித்துள்ளார்.
வெர்டிஸ் நாடு மருத்துவம், காவல்துறை போன்ற திறன்களைக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.