மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு! நாடாளுமன்ற...
இம்ரான் கானின் விடுதலைக்காக நாடு தழுவிய போராட்டம்! ராணுவப் படைகள் குவிப்பு.. 500 பேர் கைது!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, விடுதலைச் செய்யக் கூறி அவரது ஆதரவாளர்கள் நடத்தி வரும் மாபெரும் போராட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை விதிக்கப்பட்ட பின்னரும், அவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இம்ரான் கானை விடுவிக்கக் கோரி, பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களிலும் நாடு தழுவிய மக்கள் போராட்டம் அவரது கட்சியான தெஹிரிக் - இ - இன்சாஃப் சார்பில் இன்று (ஆக.5) நடத்தப்பட்டு வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் தேசிய அளவில் நடைபெற்ற போராட்டம் மற்றும் பேரணிகளில் ஈடுபட்ட இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர், அந்நாட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலானோர் பஞ்சாப் மாகாணத்தின் லாஹூர் நகரத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் போராட்டமானது இன்று (ஆக.5) இரவு வரை நடைபெறும் எனவும் இம்ரான் கானின் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தை, பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபின் முஸ்லிம் லீக்- நவாஸ் கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில், இம்ரான் கானின் ஆதரவாளார்கள் அங்கு குண்டுக்கட்டாக அதிகளவில் கைது செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
மேலும், அம்மாகாணத்தில் தெஹிரிக் - இ - இன்சாஃப் கட்சியின் மூத்த தலைவர்களைக் குறிவைத்து அரசுப் படைகள் தாக்குதல் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
இத்துடன், இம்ரான் கான் அடைக்கப்பட்டிருக்கும் அடியாலா சிறையை நோக்கி பேரணி நடைபெற்று அங்கும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, இம்ரான் கானின் விடுதலைக்காகப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதால், பஞ்சாப் மாகாணம் முழுவதும் 144 தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடியாலா சிறையைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!