சிராஜ்: இந்திய கிரிக்கெட்டின் அகராதியிலிருந்து மறையும் பணிச்சுமை!
பணிச்சுமை குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர், “சிராஜ் பந்துவீச்சினால் இனிமேலாவது இந்த வார்த்தை இந்திய கிரிக்கெட்டின் அகராதியிலிருந்து மறையுமென நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியின் கடைசி டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 4, இரண்டாம் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 2-2 என சமன்படுத்தியது.
இந்தத் தொடரில் சிராஜ் 185.3 ஓவர்கள் வீசியுள்ளார். அதில் 23 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.
வலிகளை மறந்துவிடுங்கள்
சிராஜ் பணிச்சுமை குறித்து எப்போதும் குறை சொன்னதில்லை. ஆனால், பும்ரா அதைக் குறிப்பிட்டு பல போட்டிகளில் விளையாடுவதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது:
இந்தியாவுக்காக விளையாடும்போது வலி, வேதனைகளை மறக்க வேண்டும்.
எல்லையில் இராணுவ வீரர்கள் குளிர் குறித்து குறை சொல்கிறார்களா? ரிஷப் பந்த் என்ன செய்தார்? கால் உடைந்தும் பேட்டிங் செய்தார். அதைத்தான் வீரர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
சிராஜ் முன்னுதராணம்
140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவை நீங்கள் பிரதிநிதிப்படுத்தி விளையாடுகிறீர்கள். அதைதான் சிராஜிடம் காண்கிறோம்.
சிராஜ் தனது ஒட்டுமொத்த உழைப்பையும் வழங்கி பந்து வீசிகிறார். அவர் எப்போதும் பணிச்சுமை எனக் கூறுவதில்லை.
5 டெஸ்ட் போட்டிகளில் 7-8 ஓவர்கள் கொண்ட ஸ்பெல் வீசுகிறார். ஏனெனில் கேப்டன் வேண்டுமென நினைக்கிறார். நாடும் அவரை நம்புகிறது.
பணிச்சுமை என்பது மனரீதியானது
பணிச்சுமை எனப் பேசுபவர்களை நீங்கள் ஆதரித்தால் உங்களுக்கு ஃபீல்டிங்கில் சிறப்பானவர்கள் கிடைக்கவே மாட்டார்கள்.
இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் இருந்து பணிச்சுமை என்ற வார்த்தையே மறைந்துபோகும் என நம்புகிறேன். நான் இதை பலகாலமாக சொல்லி வருகிறேன்.
பணிச்சுமை என்பது உடல் ரீதியானது அல்ல, மனரீதியானது என்பதை நாம் அனைவரும் கவனித்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.