ஹிந்துபோல நடித்து 12 பெண்களிடம் மோசடி!
உத்தரப் பிரதேசத்தில் ஹிந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டு 12 பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் வாரணாசியில் ஷராஃப் ரிஸ்வி என்பவர், தன்னை ஹிந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டு, தன்னை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பெண்ணின் புகாரையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி ரிஸ்வியை கைது செய்தனர். விசாரணையில், ரிஸ்வி 12 பெண்களை ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது.
சமூக ஊடகங்களில் சாம்ராட் சிங், விஜய்குமார், அஜய்குமார் என்று வெவ்வேறு போலியான பெயர்கள் மூலம் உலவிவந்த ரிஸ்வி, திருமண உதவிமைய செயலிகளில் பெண்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
குறிவைக்கும் சில பெண்களிடம் நட்பினை வளர்த்து, அவர்களிடம் தன்னை ஒரு தொழிலதிபர்போல அடையாளப்படுத்திக் கொள்கிறார். அவர்களுக்கிடையேயான உறவில் வலுவடைந்ததும், வாடகைக் கார், விலையுயர்ந்த ஆடைகள் என்று தன்னை பணக்காரர்போல காட்டிக்கொண்டு பெண்ணின் வீட்டுக்கு நிச்சயம் மேற்கொள்ள செல்வாராம். மேலும், இவரின் வீட்டினருடன் பெண் வீட்டார் விடியோ காலில் பேச வேண்டுமென்றால், தனது நண்பர்களை குடும்பத்தினர் என்றும் அறிமுகப்படுத்தி ஏமாற்றியுள்ளார்.
இவ்வாறாக பல பெண்களைக் குறிவைத்து, அவர்களைத் தொடர்புகொண்டு, அவர்களிடம் நட்பு வளர்த்து, பின்னர் திருமணம்வரையில் உறவினை வளர்த்துள்ளார். மேலும், அவர்களை தனது ஆசைக்கு இணங்கவும் வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பெண்களிடம் ரூ. 5 லட்சம் பணமும் பறித்துள்ளார். அதுமட்டுமின்றி, திருமணத்துக்கு முன்னதாக அவர்களை இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்.
இந்த நிலையில்தான், ரிஸ்வியின் மோசடியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ரிஸ்வியின் கட்டாய மதமாற்றம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.