கூகுள் க்ரோம் என்ன விலை? ரூ. 3 லட்சம் கோடிக்கு வாங்கும் தமிழர்?
கூகுள் க்ரோமை சென்னை வம்சாவளி வாங்குவதற்காக கோரிக்கை விடுத்துள்ளார்.
தொழில்நுட்ப உலகில் தனக்கென தனியிடத்தை பல ஆண்டுகளாகத் தக்கவைத்து வருகிறது, கூகுள் நிறுவனம். கூகுள் ப்ரவுசர் (தேடுபொறி), வரைபடம், மின்னஞ்சல் என பலவற்றையும் கூகுள் வழங்கி வருகிறது. 2008 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கூகுள் ப்ரவுசர் உருவாக்கத்தில் சுந்தர் பிச்சை என்னும் தமிழருக்கும் முக்கிய பங்களிப்பு உண்டு.
இந்த நிலையில், தற்போது வெளிவரும் மற்றும் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து நிறுவனங்களின் மொபைல் போன்களிலும் கூகுள் க்ரோம் மட்டுமே இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மற்ற தேடுபொறிகளுக்கு இடம்கொடுக்காமல், கூகுள் ப்ரவுசர் மட்டும் ஆதிக்கம் செலுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனையடுத்து, கூகுள் ஏகபோக உரிமையை அனுபவிப்பதாகக் கூறிய கொலம்பியா நீதிமன்றம், கூகுள் நிறுவனத்துக்கு எதிராக உத்தரவுகளைப் பிறப்பித்தது.
இதனிடையே, கூகுளின் சில தயாரிப்புகளை விற்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. இதனிடையே, கூகுள் ப்ரவுசரை விற்க வேண்டியிருந்தால், தங்களிடம் வழங்கலாம் என்று சென்னை வம்சாவளியான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர் கூறியுள்ளார்.
மேலும், கூகுள் ப்ரவுசருக்காக அவர் 34.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 3.02 லட்சம் கோடி) வழங்க முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் பிறந்து, ஐஐடி மெட்ராஸ் உள்பட அமெரிக்காவிலும் பயின்ற அரவிந்த், 2022 ஆம் ஆண்டில் பெர்ப்லெக்ஸ்டி (Perplexity AI) என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கினார்.
கடந்தாண்டு மத்தியில் ஒரு பில்லியன் டாலராக இருந்த நிறுவனத்தின் மதிப்பு, ஒரே வருடத்தில் 14 பில்லியன் டாலராக உயர்ந்தது. தொடர்ந்து, ஜூலை 2025 கணக்கின்படி, 18 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.