அலாஸ்கா சந்திப்பு: சாதித்த புதின்; ட்ரம்ப் நினைத்தது நடந்ததா? விரைவில் போர் நிறுத்தமா?|Explained
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு 'ஒருவழியாக' முடிந்துவிட்டது.
'நல்லபடியாக' என்று சொல்லாமல், ஒருவழியாக என்று சொல்வதற்கு காரணம் உண்டு.
விட்டுக்கொடுக்காத புதின்
2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்தப் போர், மூன்று ஆண்டுகள் தாண்டியும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர போராடி வருகிறார். அமெரிக்கா மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்ப நாடுகளும் இவர் பக்கம் இருந்தும், போர் விஷயத்தில், இவர்களால் புதினை அசைக்க முடியவில்லை.
இந்த நிலையில் தான், ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ட்ரம்பின் அதிரடி
'என்னுடைய நண்பர் தான்' என்று ட்ரம்ப் புதினை ஆரம்பத்தில் அணுகினார். அப்போது, புதின் நட்பு பாராட்டதலுக்கு தயாராக இருந்தாரே தவிர, போர் நிறுத்தத்திற்கு அல்ல.
உடனே, ட்ரம்ப் தன்னுடைய பிரம்மாஸ்திரம் ஆன 'வரி'யைக் கையிலெடுத்தார்.
போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்புகொள்ளவில்லை என்றால், கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் ரஷ்யா மீது வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
ஆனால், அன்று (ஆகஸ்ட் 8) புதின், ட்ரம்பை சந்திக்க சம்மதம் தெரிவித்தார். அதனால், ட்ரம்ப் ரஷ்யா மீதான வரி விதிப்பைத் தள்ளிப்போட்டார்.
இருந்தும், புதினை இந்தச் சந்திப்பில் வழிக்கு கொண்டுவர ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் பிரேசில் மீது அதிக வரிகளை விதித்தார்.
இதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்ததோடு நின்றுகொண்டது. மேற்படி போர் நிறுத்தத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை.
ஜெலன்ஸ்கி பதிவு
இந்த நிலையில் தான், நேற்று அமெரிக்க அதிபர் - ரஷ்ய அதிபர் சந்திப்பு நடந்தது.
இந்தச் சந்திப்பிற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, ஜெலன்ஸ்கி, 'அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் நாளிலேயே, ரஷ்யா தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தப் போர் நிறுத்தத்திற்காக உக்ரைன் ஆக்கபூர்வமாக செயல்பட தயார். நாங்கள் அமெரிக்காவை பெரிதாக நம்பியிருக்கிறோம்.
இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு வேண்டும். குறைந்தபட்சம் அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் நாடுகளின் பேச்சுவார்த்தை வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

ட்ரம்ப் - புதின் சந்திப்பு
அமெரிக்கா அலாஸ்காவில் ட்ரம்ப் - புதின் சந்திப்பு நடந்தது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
இந்தச் சந்திப்பு குறித்து புதின், 'இந்தச் சந்திப்பு முழுமையானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது' என்றும், ட்ரம்ப், 'இது மிகவும் பயனுள்ள சந்திப்பு ஆகும். இந்தச் சந்திப்பில் பல விஷயங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன. இன்னும் சில விஷயங்கள்தான் உள்ளன' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு விஷயங்கள்
செய்தியாளர்கள் சந்திப்பில் புதின் இரண்டு முக்கிய விஷயங்களைக் கூறியிருந்தார்.
ஒன்று, உக்ரைன் உடனான போரை நிறுத்த தனக்கு விருப்பம் என்றும்,
மற்றொன்று, உக்ரைன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் இந்தப் பேச்சுவார்த்தையை ஆக்கப்பூர்வமாக பார்க்க வேண்டும்... எந்தவொரு பிரச்னையையும் கிளப்பக் கூடாது என்றும் சொல்லியிருந்தார்.
ட்ரம்ப், புதின் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பது குறித்தது பெரிதாக தெரியாததற்கு காரணம், செய்தியாளர்கள் கேள்விக் கேட்க அனுமதிக்கப்படவில்லை.
மேலும், சந்திப்பு முடிந்த ஒரு சில மணிநேரத்திலேயே, புதின் ரஷ்யாவிற்கு கிளம்பிவிட்டார்.

புதினுக்கே சாதகம்
இந்தச் சந்திப்பு யாருக்கு வெற்றி என்று பார்த்தால், இது புதினுக்கு சாதகமாகவே பெரியளவில் இருக்கிறது.
இந்தச் சந்திப்பின் மிக முக்கிய நோக்கமான போர் நிறுத்தம் எட்டப்படவில்லை. அந்தப் பக்கத்தைத் தொடாமலேயே, அவர் இந்தப் பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறார்.
இந்தப் பேச்சுவார்த்தை முடிவின் மூலம், புதின் பல விஷயங்களைச் சாதித்திருக்கிறார்.
ட்ரம்ப், புதின் இடையே நடந்துள்ள இந்தப் 'முழுமையான மற்றும் பயனுள்ள' பேச்சுவார்த்தையால், இன்னும் கொஞ்சம் நாளுக்கு ட்ரம்பின் வரி மிரட்டல் இருக்காது.
அடுத்தது, அவர் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துவது குறித்து எதுவும் சொல்லவில்லை. அதனால், வரி மிரட்டல் இல்லாமல், உக்ரைன் மீதான தாக்குதல்களைத் தாராளமாக தொடரலாம்.
இதுவரை அவர் அமைதி பேச்சுவார்த்தையில் நேரடியாக கலந்துகொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்தச் சந்திப்பு அதை ஓரளவு மட்டுப்படுத்தி உள்ளது.
ஆரம்பத்தில் இருந்தே, அவர் ஜெலன்ஸ்கியை சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார். அவரது நோக்கத்தைப் போலவே, ஜெலன்ஸ்கி இல்லாமேலேயே ரஷ்யா - உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை ட்ரம்ப் உடன் நடந்து முடிந்துள்ளது.

ட்ரம்பை புதின் சந்தித்தது, அவர் மீது ரஷ்யா மக்களுக்கு உள்ள இமேஜை கூட்டியிருக்கும்.
ரஷ்யா மீது வரி விதிக்காமல், ரஷ்யா உடன் வணிகம் செய்யும் நாடுகளின் மீது வரியை விதித்து வந்தார் ட்ரம்ப். இந்தச் சந்திப்பிற்கு பிறகு, இப்போதைக்கு அந்த நாடுகளின் மீது கூடுதல் வரி கிடையாது என்பதை அறிவித்திருக்கிறார்.
இதனால், ரஷ்யா உடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு தற்காலிகமாக நெருக்கடிகள் கிடையாது. அதனால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், ரஷ்யா உடனான வணிகத்தை அந்த நாடுகள் தொடரும். இதுவும் ரஷ்யாவிற்கு மிகப்பெரிய வெற்றி.
ட்ரம்பிற்கு வெற்றியா?
இந்தச் சந்திப்பில் ட்ரம்பிற்கு எதாவது பிளஸ் ஏற்பட்டுள்ளதா என்று பார்த்தால், பெரிதாக இல்லை என்று சொல்லலாம். வழக்கத்திற்கு மாறாக, புதின் உடனான செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப் அதிகம் பேசவில்லை.
ஆனால், அதன் பின், ஃபாக்ஸ் நியூஸிற்கு கொடுத்த பேட்டியில், புதின் உடனான சந்திப்பிற்கு 10-க்கு 10 மதிப்பெண்கள் கொடுத்துள்ளார்.
ட்ரம்ப், ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளை மீண்டும் உக்ரைனுக்கே வழங்கப்படும் என்று முன்னர் கூறியிருந்தார். அதற்கு புதின் ஒப்புகொண்டதாக தற்போது ட்ரம்ப் கூறுகிறார்.
ஆனால், அது குறித்து புதின் எதுவும் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிடவில்லை.

இப்போதைக்கு ட்ரம்ப் நினைத்தது நடந்தது ஒன்று உண்டு என்றால், அது புதின் அலாஸ்கா வந்தது... அங்கு பேச்சுவார்த்தை நடத்தியது அவ்வளவு தான்.
ஆனால், இந்தச் சந்திப்பில் ஒரு விஷயத்தில் மிகவும் உறுதியாக இருக்கிறார். அது, 'போர் நிறுத்தம் குறித்து ஒப்பந்தம் ஏற்படும் வரையில், அமெரிக்கா - ரஷ்யா ஒப்பந்தம் கிடையாது' என்பது ஆகும்.
புதின் தன்னுடன் சில ரஷ்ய தொழிலதிபர்களையும் அழைத்து வந்திருந்தார். ஆனால், வணிகம் குறித்த எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை.
மாஸ்கோவிலா..?
ட்ரம்ப் அடுத்த ஒரு சந்திப்பு நடக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார். அதில் புதின், ஜெலன்ஸ்கி இருவரும் கலந்துகொள்வார்கள். அந்த இருவரும் விரும்புவதால், நானும் அந்தச் சந்திப்பில் கலந்துகொள்வேன் என்று கூறியிருக்கிறார்.
ஆக, அடுத்த சந்திப்பு உறுதியாகி உள்ளது.
அது 'மாஸ்கோ'வில் நடக்க வேண்டும் என்று ஓப்பன் மைக்கிலேயே ட்ரம்பிடம், புதின் தெரிவித்திக்கிறார். அது அங்கே நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
காரணம், ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் நடக்கும் சந்திப்பில், ஜெலன்ஸ்கி கலந்துகொள்வாரா என்பது பெரிய கேள்விக்குறி. இதனால், அப்போது பேச்சுவார்த்தை கைக்கூடாமல் போகலாம்.
இந்தியாவிற்கு பாதிப்பு உண்டா?
இந்தியா, பிரேசில் மீது ரஷ்யா உடன் வணிகம் செய்வதற்காக மேலும் வரி விதிக்கப்படுமா என்று கேட்டால், அதற்கு பதில், 'இப்போதைக்கு இல்லை'.
ஆனால், அடுத்த ரஷ்யாவின் நகர்வுகள் என்ன, புதினின் நிலைப்பாடு என்ன என்பதைப் பொறுத்து, இந்த வரி விதிப்புகள் இருக்கும்.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...