ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
சென்னை: ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகன் திருக்கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்றது வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்திருக்கோயிலில் தை கிருத்திகை, ஆடிக் கிருத்திகைகளில் பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
அவ்வகையில் இன்று காலை மூலவர் பாலசுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு மலர் அலங்காரத்தில் தீப ஆராதனையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் சிறப்பு மற்றும் இலவச தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் திருக்கோயிலை வலம் வந்து நேர்த்திக்கடனை செலுத்தி இறையருள் பெற்றனர்.
அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கண்காணித்து வருகிறது.