பட்டங்கள் மட்டுமல்ல… இதயங்களும் பறந்தன! - 4th International Kite Festival in நம்...
எம்எல்ஏ விடுதியில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு
சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத் துறையினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பணமோசடி வழக்கில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது மகன், மகள் வீடுகள் மற்றும் சென்னையில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் பெரியசாமியின் அறையில் சோதனை செய்தபோது அங்கு சாவி ஒன்று கிடைத்துள்ளதால், அது குறித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஐ.பெரியசாமி அறையை பூட்டிச் சென்ற செயலக அதிகாரிகள்
இதனிடையே, தலைமைச் செயலகத்தில் ஐ.பெரியசாமி அறையின் கதவை தலைமைச் செயலக அதிகாரிகள் பூட்டிச் சென்றனர். தலைமைச் செயலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்துக்குள் வருவோர் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் குடியிருப்பு வளாகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் எந்தவொரு அனுமதியுமின்றி உள்ளே நுழைந்தனர். பின்னர் ஐ. பெரியசாமியின் மகனும் பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமாரின் அறையை திறந்துவிடக் கோரி பேரவை உறுப்பினரின் செயலாளர் சீனிவாசனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதை அடுத்து சாவியை கொடுத்துள்ளார்.
இதையடுத்து அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு
மேலும், சட்டப்பேரவை உறுப்பினரின் செயலாளர் சீனிவாசன் திருவல்லிக்கேணி காவல்துறையில் சட்டப்பேரவை உறுப்பினரின் வளாகத்திற்குள் உள்ளே அத்துமீறி நுழைய முயன்ற மர்ம நபர்கள் நான்கு பேர் மீது புகார் கொடுத்துள்ளார்.
புகாரை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேரும் மீதும் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் .
மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையின் போது சீனிவாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சோதனையில் ஈடுபட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய 5 சிஆர்பிஎஃப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சட்டப்பேரவை உறுப்பினர் அறையை சோதனை செய்யும் முன்பாகவே ஆதாரத்துக்காக விடியோ காட்சிகளும் எடுத்து வைத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.