Trump: "புதின் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை, ஆனால்..." - அமைதிக்கு அமெரிக்கா க...
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக புதினுடன் டிரம்ப் பெருமிதம்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இடையேயான பேச்சுவார்த்தையின் போது இந்தியா - பாகிஸ்தான் உள்பட ஐந்து போர்களை தானே மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக மீண்டும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடன் போரில் ஈடுபடும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா அண்மையில் விதித்தது.
இந்தச் சூழலில் அமெரிக்காவின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் ஒரு நாளைக்கு ரஷியாவிடம் இருந்து 16 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்த நிலையில் இம்மாதம் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் மீதான போரை நிறுத்துவது குறித்து அலாஸ்காவின் ஆங்கரேஜில் வெள்ளிக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் இரு தலைவர்களும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.
அப்போது, உக்ரைன் போர் குறித்த பேச்சுவார்த்தையில், தனக்கும் டிரம்புக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக புதின் கூறினார், மேலும் இந்த புதிய முன்னேற்றத்தை நாசமாக்க வேண்டாம் என்று புதின் எச்சரிக்கை விடுத்தார்.
டிரம்ப் பேசுகையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் விரைவில் பேச திட்டமிட்டுள்ளதாகவும், இங்கு நடந்த விவாதங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
மேலும், இந்தியா-ரஷிய எண்ணெய் கொள்முதல் குறித்தும் கருத்து தெரிவித்த டிரம்ப், "அணு ஆயுதப் போராக வெடிக்கவிருந்த இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட ஐந்து போர்களை தானே மத்தியஸ்தம் செய்து முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக மீண்டும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்".
ஆனால், ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் 100 சதவீத இலக்குகள் எட்டப்பட்டன; பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் தகா்க்கப்பட்டு, பயங்கரவாத சதிகாரா்கள் அழித்தொழிக்கப்பட்டனா். பாகிஸ்தான் ராணுவத் தளங்களுக்கும் கடும் சேதம் விளைவிக்கப்பட்டது. பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதன்பேரில்தான் இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தியது. இதில் அமெரிக்காவின் எந்த மத்தியஸ்தமும் இல்லாமல் தங்கள் ராணுவங்களுக்கு இடையேயான நேரடிப் பேச்சுவார்த்தைகளின் மூலம் எட்டப்பட்ட முடிவு’ என்று மத்திய அரசு தொடா்ந்து கூறி வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் போரை தான் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறிவரும் கருத்துகளை முன்வைத்து, பிரதமா் மோடி மற்றும் மத்திய அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.