சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்
இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, உரையாற்றினார். அந்த உரையில், ``இந்தியா வலிமையுடன் வளர்ந்து வருகிறது. தாய்நாட்டைப் போற்றுவதில் நாம் எல்லோரும் ஒன்றுபட்டிருக்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு வணக்கம். அரசியலமைப்பு நமது வழிகாட்டும் சக்தி. இயற்கை நம்மை சோதிக்கிறது. எனது நிலம் தாகமாக இருக்கும்போது எதிரிகளின் மண்ணுக்கு நீர்ப்பாசனம் செய்ய சிந்து நீர் பயன்படுத்தப்பட்டது. இப்போது, இந்தியாவும் அதன் விவசாயிகளும் அதற்குச் சொந்தமான தண்ணீரில் உரிமைகளைப் பெறுவார்கள்.
பொருளாதார சுயநலம் அதிகரித்து வருகிறது. நாம் நமது சொந்த பாதையை வகுக்க வேண்டும். தேவையற்ற இணக்கங்களை நாம் களைந்துள்ளோம். வருமான வரி உட்பட மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வந்தோம். இந்த சீர்திருத்தங்கள் பொருளாதார அரங்கிற்கு அப்பாற்பட்டவை. ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் வரிச்சுமையைக் குறைத்துள்ளோம். தீபாவளிக்குள் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையில் விரைவில் பெரிய குறைவு இருக்கும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் பாதையில் உள்ளது. நமது பெரிய பொருளாதார குறிகாட்டிகள் மிகவும் வலுவாக உள்ளன. மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியா மீது நம்பிக்கையுடன் உள்ளன" என உரையாற்றினார்.

பிரதமர் மோடியின் உரை குறித்து சி.பி.எம் மாநில செயலாளர் சண்முகம் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஒவ்வொரு சுதந்திர தின விழாவின் போதும் வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுவதையே வழக்கமாகக் கொண்டுள்ள பிரதமர் மோடி இந்த முறை 103 நிமிடங்கள் பேசி அதிக வடைகளை சுட்டு சாதனை படைத்துள்ளார். வஞ்சனை செய்வாரடி - கிளியே வாய் சொல்லில் வீரரடி என்ற பாரதியின் வரிகள் இவருக்குத்தான் சாலப்பொருத்தம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.