சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
`மும்பை மாநகராட்சி தேர்தலில் தாக்கரே சகோதரர்கள் கூட்டணி அமைத்து போட்டி’ - உத்தவ் கட்சி
மகாராஷ்டிராவில் அக்டோபர் அல்லது நவம்பரில் மும்பை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடக்கும் இத்தேர்தல் உத்தவ் தாக்கரேயிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து இத்தேர்தலில் வெற்றி பெறவேண்டிய நெருக்கடியில் உத்தவ் தாக்கரே இருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிவசேனாவில் இருந்து விலகி தனிக்கட்சி நடத்தி வரும் ராஜ் தாக்கரே முதல் முறையாக மராத்தி பிரச்னையில் உத்தவ் தாக்கரேயுடன் கைகோர்த்துள்ளார்.

சிவசேனாவில் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாகவே ராஜ் தாக்கரே அக்கட்சியில் இருந்து வெளியில் வந்து தனிக்கட்சி தொடங்கினார். தனிக்கட்சி தொடங்கிய பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே இடையே எந்த வித அரசியல் தொடர்பும் இல்லாமல் இருந்தது. மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் இந்தியை திணித்தபோது அதற்கு எதிராக ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் ஒன்றாக குரல் கொடுத்தனர். இதையடுத்து மாநில அரசு இந்தி திணிப்பை கைவிட்டது.
ராஜ் தாக்கரே நீண்ட நாட்களாக எப்படியும் பா.ஜ.க தன்னை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும் என்று எதிர்பார்த்தார். ஆனால் பா.ஜ.க கூட்டணியில் ஏற்கனவே அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிகள் இருக்கிறது. இதனால் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை தங்களது கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க தயக்கம் காட்டி வந்தது. இதையடுத்து இனியும் பொருத்திருந்து பயனில்லை என்று கருதிய ராஜ் தாக்கரே தேர்தலில் உத்தவ் தாக்கரேயுடன் கைகோர்க்க தயாராகிவிட்டார். கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்கவேண்டாம் என்று ராஜ் தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் உத்தவ் தாக்கரேயின் வலதுகரமாக செயல்படும் சஞ்சய் ராவுத் எம்.பி இது குறித்து அளித்த பேட்டியில்,'' வரும் மாநகராட்சி தேர்தலில் தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் மும்பை, தானே, நாசிக், கல்யான்-டோம்பிவலியில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெறுவார்கள். ராஜ் மற்றும் உத்தவ் தாக்கரேவின் பலம் மராத்தி மொழி பேசுபவர்களின் ஒற்றுமையின் பலம் ஆகும். மராத்தியர்களின் இரும்பு கரத்தை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது" என்று ராவுத் செய்தியாளர்களிடம் கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க அமைச்சர் கிரீஷ் மகாஜன்,''ஜனநாயகத்தில் யாரும் பிரியலாம் அல்லது ஒன்று சேரலாம். அவர்கள் முதலில் மும்பை, தானே, நாசிக்கில் வெற்றி பெறவேண்டும். அதன் பிறகு அவர்கள் மேற்கொண்டு பேசட்டும்''என்றார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மூத்த தலைவர் பரத் கோகாவாலா இது குறித்து கூறுகையில்,'' ஆளும் மகாயுதி கூட்டணி அனைத்து மாநகராட்சிகளிலும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தாக்கரே சகோதரர்கள் முதல் முறையாக ஒன்று சேர இருக்கும் நிலையில் ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் உத்தவ் தாக்கரே இடம் பெற்று இருக்கிறார். உத்தவ் தாக்கரே தனது சகோதரர் ராஜ் தாக்கரேயுடன் கைகோர்க்க முடிவு செய்து இருப்பதை காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் எந்தமாதிரி எடுத்துக்கொள்ள இருக்கிறது என்று தெரியவில்லை.
ராஜ் தாக்கரேயும் மகாவிகாஸ் அகாடியில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மும்பை, தானே, நாசிக் போன்ற பகுதியில் காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிக்கு பெரிய அளவில் செல்வாக்கு கிடையாது. சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த அதிகமான தலைவர்கள் எதிரணிக்கு சென்றுவிட்டனர்.