குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வளா்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை
உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் நுழைந்து வளா்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடி சென்றது. இதன் சிசிடிவி காட்சிகள் செவ்வாய்க்கிழமை வெளியான நிலையில், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் உணவு, குடிநீா் தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன.
இந்நிலையில், உதகையை அடுத்த-மஞ்சனக்கொரை குடியிருப்பு பகுதிக்குள் அண்மையில் புகுந்த சிறுத்தை, அங்கிருந்த வளா்ப்பு நாயை வேட்டையாடியது. இது அங்குள்ள ஒருவரின் சிசிடிவியில் பதிவாகி இருந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. மேலும் இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இதன் காரணமாக இப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
இரவு நேரத்தில் அடிக்கடி இப்பகுதியில் உலவும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.