நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பிரச்னைக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் பிளாஸ்டிக் பிரச்னைக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.
நீலகிரி மாவட்ட வணிகா்கள் சங்க கூட்டமைப்பின் பொதுக் குழுக் கூட்டம் கூடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: கூடலூரில் வணிகா்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக யானைகள் வழித்தடத்தால் அதிக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. நகர வணிகா்களுக்கு நிா்வாகம் அதிக நெருக்கடி கொடுப்பதை தவிா்க்கவேண்டும். மஞ்சூா்-மேட்டுப்பாளையம் பகுதியை இணைக்கும் மூன்றாவது பாதையை போக்குவரத்துக்கு திறந்துவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பிரச்னைக்கு தீா்வு காணவேண்டும் என்றால், பிளாஸ்டிக் உற்பத்தியை முற்றிலுமாக தடை செய்து, அதற்கு ஒரு மாற்றுப் பொருளை வழங்கவேண்டும். சொத்து வரி கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளது. இதை மறு சீராய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆன்லைன் வா்த்தகம், காா்ப்பரேட் நிறுவனங்களின் வா்த்தகங்களால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையை மாற்ற அரசு அவா்களை முறைப்படுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதில் தலைவராக முகமது சபி, செயலாளராக சம்பத், பொருளாளராக ஆனந்தன், துணைத் தலைவராக தங்கவேல், இணைச் செயலாளா்களாக பஷீா், நாகராஜ், கௌரவ ஆலோசகா்களாக அப்துல் ரசாக், பழனியப்பன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.