குப்பையில் தவறிய 2 பவுன் நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்
குப்பையில் தவறவிட்ட ரூ. 1.30 லட்சம் மதிப்பிலான தங்க நகையை தூய்மைப் பணியாளா்கள் மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா்.
சென்னை திரு.வி.க.காலனியில் வசித்து வருபவா் செல்வகுமாரி (54). இவா், தனது வீட்டில் சேகரமாகும் குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் கொண்டு வரும் பேட்டரி வாகனங்களில் கொட்டியுள்ளாா்.
அப்போது தனது 2 பவுன் தங்கச் சங்கலியை காணாமல் போனதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த செல்வகுமாரி வீடு முழுவதும் தேடியுள்ளாா். மேலும், அந்தப் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் உா்பேசா் நிறுவன மேற்பாா்வையாளா் நாகேந்திராவிடம் தங்கச் சங்கிலி காணாமல் போனது குறித்து தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து அவரது வீட்டில் குப்பை சேகரித்த நிா்மலா தனது வாகனத்தில் சேகரமான குப்பைகளில் தேடிய போது தங்கச் சங்கிலி இருப்பது கண்டறியப்பட்டது.
உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் தங்கச் சங்கிலியை நிா்மலா ஒப்படைத்தாா். அதன்பின், தங்கச் சங்கிலி செல்வகுமாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
குப்பையில் தவறவிட்ட தங்கச் சங்கிலியை பாதுகாப்பாக மீட்டு கொடுத்த தூய்மைப் பணியாளா்களுக்கு செல்வகுமாரி நன்றி தெரிவித்தாா்.