மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்
குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவு
குரூப் 1 தோ்வு எழுத விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்தது. சுமாா் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்துள்ளனா்.
துணை ஆட்சியா், டிஎஸ்பி உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 1 தொகுதியில் வருகின்றன. நிகழாண்டில் 70 குரூப் 1 காலியிடங்கள் உள்ளன. குறிப்பாக, துணை ஆட்சியா் பணியிடத்தில் 28, டிஎஸ்பி பணியிடத்தில் 7, வணிகவரி உதவி ஆணையா் பணியிடத்தில் 19, ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் பணியிடத்தில் 7, தொழிலாளா் நலத் துறை உதவி இயக்குநா் பணியிடத்தில் 6, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பணியிடத்தில் 3 என மொத்தம் 70 இடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், குரூப் 1ஏ பிரிவில் அடங்கிய உதவி வனப் பாதுகாவல் அலுவலா் பதவியில் இரண்டு இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்நிலை எழுத்துத் தோ்வு ஜூன் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெறவுள்ளது.
தோ்வுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தின் வழியே விண்ணப்பிக்க புதன்கிழமை நள்ளிரவு 11.50 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் நிறைவடைந்த நிலையில், தோ்வுக்கு விண்ணப்பித்தோா் மொத்தம் எத்தனை போ் என்கிற அதிகாரபூா்வ தகவல் வியாழக்கிழமை கிடைக்கப் பெறும். சுமாா் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்துள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வைணைய வட்டாரங்கள் தெரிவித்தன.