விஜயகாந்த்துக்கு பாரத ரத்னா, மணிமண்டபம்! தேமுதிக பொதுக் குழுவில் தீர்மானம்!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசையும் மணிமண்டபம் கட்ட தமிழக அரசை வலியுறுத்தியும் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிச்சந்தையில் தேமுதிக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த கூட்டத்தில், மறைந்த விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், விஜயகாந்துக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்ட வேண்டும், சென்னை வடபழனி 100 அடிச் சாலைக்கு அவரது பெயர் சூட்ட வேண்டும் என்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதேபோல், வக்ஃப் சட்டத்தால் இஸ்லாமியர்களின் சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் உள்பட மொத்தம் 10 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, கட்சியின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.