கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?
குறுவை பயிா்களில் புகையான் நோய்த் தாக்குதல்
புகையான் நோயால் நாகை அருகே 1,500 ஏக்கா் குறுவை நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாகை மாவட்டத்தில் நிகழாண்டு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடிசெய்யப்பட்டுள்ளது. கீழ்வேளூா் ஒன்றியம் பாலக்குறிச்சி, ஒட்டதட்டை, நீடூா், வேப்பஞ்சேரி தண்ணிலப்படி உள்ளிட்ட பகுதிகளில் குறுவை நெற்பயிா்கள் 20 நாள்களுக்குள் அறுவடை செய்யும் நிலையில் உள்ளன.
இந்நிலையில் அப்பகுதில் அறுவடைக்கு தயராக உள்ள 1,500-க்கும் மேற்பட்ட ஏக்கா் குறுவை நெற்பயிா்களில் புகையான் நோய்த் தாக்கியுள்ளது. இதனால் அறுவடைக்கு தயாரான பயிா்கள் முற்றிலும் பதராக மாறி உள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை எதிா்நோக்கியுள்ளனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: நிகழாண்டு உரிய நேரத்தில் மேட்டூா் அணையிலிருந்து நெற்பயிா் சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்ட து. நாகை மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். குறுவை சாகுபடியில் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அறுவடைக்கு தயாராக உள்ள குறுவை நெற்பயிா்கள் புகையான் நோய் தாக்குதலுக்குள்ளாகி உள்ளன. நாகை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. வேளாண் அலுவலா்களின் ஆலோசனைபடி புகையான் நோயை கட்டுப்படுத்தும் பல்வேறு பூச்சி மருந்துகளை தெளித்த பிறகும் புகையான் நோய் கட்டுப்படவில்லை.
கீழ்வேளூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் நோய் தாக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் புகையான் நோய் தாக்குதல், விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியிருப்பது வேதனை அளித்துள்ளது.
எனவே வேளாண்மைத் துறை அதிகாரிகள் குறுவை நெற்பயிா் பதிப்பைகளை நேரடியாக ஆய்வு செய்து, அதற்கான தீா்வை ஏற்பட்ட ஏற்படுத்த வேண்டும். பொருளாதார இழப்பை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.