குழித்துறையில் தவித்த முதியவா் மீட்பு: வட்ட சட்டப் பணிகள் குழுவுக்கு பாராட்டு
குழித்துறையில் உடல்நிலை குன்றிய முதியவரை குழித்துறை வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வழக்குரைஞா்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
திருநெல்வேலியைச் சோ்ந்தவா் 80 வயதான முதியவா் ஆறுமுகம். இவா் தனது மூன்று பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டு, கவனிக்க யாரும் இல்லாத நிலையில் கடந்த சில மாதங்களாக கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை சந்திப்பில் தங்கியிருந்து, யாசகம் எடுத்து பிழைத்து வந்தாா்.
இந்த நிலையில் கடந்த இரு வாரங்களாக இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு, கால்கள் செயலிழந்த நிலையில் அவதிப்பட்டு வந்தாா். இதுகுறித்த தகவல், குழித்துறை வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சாா்பு நீதிபதியுமான சுந்தரி கவனத்துக்கு வந்தது.
இதையடுத்து வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வழக்குரைஞா்கள் பால்ஜி, வினோத், சமூக சேவகா் ராஜகோபால் உள்ளிட்டோா் முதியவா் ஆறுமுகத்தை மீட்டு குளிப்பாட்டி, உணவளித்து தொலையாவட்டம் பகுதியில் உள்ள அனிதாலயம் காப்பகத்தில் ஒப்படைத்தனா். வட்ட சட்டப் பணிகள் குழுவினரின் இச் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டினா்.