ஜிஎஸ்டி குறைப்பால் அத்தியாவசியப் பொருள்கள் விலை குறையும்: பொன்.ராதாகிருஷ்ணன்
மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஜி.எஸ்.டி. குறைப்பு சீரமைப்பால் அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக குறையும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.
நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது: ஜி.எஸ்.டி.யில் 5 முதல் 28 சதவீதம் வரை வரி விதிப்புகள் இருந்தன. தற்போது அந்த நிலையை மாற்றி, நேரடியாக 5 மற்றும் 18 சதவீதமாக வரியை மத்திய அரசு சீரமைத்துள்ளது.
இதன்மூலம் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு அத்தியாவசிய பொருள்களின் விலை குறையும். சுருக்கமாகக் கூறவேண்டுமெனில், தற்போது மாதம் ஒன்றுக்கு மக்கள் அத்தியாவசியப் பொருள்களை ரூ.2,000 க்கு வாங்கும் நிலையில், ஜி.எஸ்.டி. குறைப்பால் குறைந்தபட்சம் ரூ. 250 மிச்சமாகும்.
எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக தற்போது தவெக தலைவா் விஜய்யின் பொதுக் கூட்டத்துக்கு மக்கள் கூட்டம் அதிகம் கூடுகிறது.
கண்ணாடி பாலம்: கன்னியாகுமரி கடலில் உள்ள கண்ணாடி பாலத்தில் மாதம் ஒருமுறை பிரச்னை எழுகிறது. ஆனால், அதுபற்றிய தெளிவான விளக்கங்களை யாரும் அளிப்பதில்லை.
பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்தபோது கட்சிக்காக மிகவும் உழைத்தாா். அண்ணாமலை மீது கட்சி நிா்வாகி தெரிவித்த புகாரானது பொதுப் பிரச்னை அல்ல; அது தனிப்பட்ட பிரச்னையாகும். அதை அரசியலாக்குவது சரியல்ல என்றாா் அவா்.
பேட்டியின்போது, எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ, மாவட்ட பாஜக தலைவா்கள் கோபகுமாா் (குமரி கிழக்கு), ஆா்.டி.சுரேஷ் (குமரி மேற்கு), பாஜக மாநிலச் செயலாளா் மீனாதேவ், மாவட்ட பொருளாளா் பி.முத்துராமன், நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா்கள் சுனில்குமாா், சதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.