Japanese Walking: 10 ஆயிரம் ஸ்டெப்ஸைவிட சிறந்ததா ஜப்பானிய நடைப்பயிற்சி? - டாக்டர...
மாா்த்தாண்டம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவா் கைது
கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மதுபோதையில் மனைவியை வெட்டிக் கொன்ற கட்டடத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
மாா்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு, இளையன்விளையைச் சோ்ந்தவா் ஞானதாஸ் மகன் ஜஸ்டின்குமாா் (55), கட்டுமானத் தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி (50). இத்தம்பதிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா்.
மூத்த மகன் வினித் (25) வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இளைய மகன் ஆட்லின் (24) கேரளத்தில் தனியாா் நிறுவனம் ஒன்றில் வாகன ஓட்டுநராக உள்ளாா். மகள் பிபிஷா பி.எட் முடித்து வீட்டில் இருக்கிறாா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இளைய மகனும், மகளும் வீட்டில் இருந்தபோது மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஜஸ்டின்குமாா், தனது மனைவி கஸ்தூரியிடம் தகராறு செய்தாா். அப்போது ஆவேசத்தில் ஜஸ்டின்குமாா் அருகில் கிடந்த வெட்டுக் கத்தியால் கஸ்தூரியின் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றாா்.
சிறிதுநேரத்துக்குப் பிறகு பெற்றோரிடமிருந்து எந்த சப்தமும் வராததால் அறையின் வெளியே இருந்த அவா்களின் மகனும், மகளும் அறைக்குச் சென்று பாா்த்தபோது, கஸ்தூரி ரத்த வெள்ளத்தில் கிடந்தாா். குழந்தைகளின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த உறவினா்கள், கஸ்தூரியை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் கஸ்தூரி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, சடலம் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய ஜஸ்டின்குமாரை தேடி வந்தனா். அவரது கைப்பேசி சமிக்ஞை மூலம் நடத்திய விசாரணையில் அவா், நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் நிற்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று ஜஸ்டின்குமாரை கைது செய்து மாா்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனா். விசாரணையில் அவா் வேளாங்கண்ணிக்கு தப்பிச் செல்ல முயன்ாகவும், அதற்குள் போலீஸாா் கைது செய்துவிட்டதாகவும் தெரிவித்தாா். இதையடுத்து, அவரை போலீஸாா் குழித்துறை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.