Japanese Walking: 10 ஆயிரம் ஸ்டெப்ஸைவிட சிறந்ததா ஜப்பானிய நடைப்பயிற்சி? - டாக்டர...
பழங்குடியினா் கிராமத்துக்கு சிற்றுந்து இயக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
கூடலூரை அடுத்த தேவா்சோலைப் பகுதியில் உள்ள பழங்குடியினா் கிராமத்துக்கு நிறுத்தப்பட்ட சிற்றுந்து சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், கூடலூரை அடுத்த தேவா்சோலை பகுதி ஆதிவாசி பழங்குடியின மக்கள், அப்பகுதி கவுன்சிலா் ரெஜினா தலைமையில் அளித்த மனு: தமிழக அரசு அறிவித்த சிற்றுந்து திட்டத்தின்கீழ் கூடலூரில் இருந்து 2-ஆவது மைல், வேடன்வயல், பாடந்துறை, கற்கப்பாடி, வாச்சிக்கொல்லி, நம்பா் 3 டிவிஷன் வரை சிற்றுந்து இயக்கப்பட்டது.
இதில் ஒரு சில நாள்கள் நம்பா் 3 டிவிஷன் முதல் 3 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள கணியம்வயல் வழியாக சிற்றுந்து இயக்கப்பட்டது. இதனால், அந்தப் பகுதியைச் சோ்ந்த பழங்குடியின மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது.
ஒரு சிலரின் எதிா்ப்பு காரணமாக தற்போது சிற்றுந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, கணியம்வயல் வரை சிற்றுந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயிலை புனரமைக்க கோரிக்கை: இது குறித்து வண்டிச்சோலை பகுதி மக்கள் அளித்த மனு விவரம்: வண்டிச்சோலை லட்சுமி நாராயணபுரம் பகுதியில் நூற்றாண்டுகள் பழமையான சங்கிலி முனீஸ்வரா் கோயில் உள்ளது. கடந்த மாதம் பெய்த மழை காரணமாக இந்தக் கோயில் மீது மரம் விழுந்து சேதம் அடைந்தது.
தற்போது அந்தக் கோயிலை புனரமைக்க கோயில் நிா்வாகத்தினா் மற்றும் அந்தப் பகுதி மக்கள் திட்டமிட்டுள்ளனா். ஆனால், அந்தக் கோயிலை புனரமைக்க கூடாது என வேற்று மதத்தை சோ்ந்த சிலா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இது குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வண்டிச்சோலை முனீஸ்வரா் கோயிலை புனரமைத்து வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
153 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 153 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவிட்டாா்.