நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
யானைகள் வழித்தடத்தில் விடுதிகள்: இடிப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை - மாவட்ட ஆட்சியா்
உதகை அருகே யானைகள் வழித்தடத்தில் உள்ள விடுதிகளை இடிப்பது குறித்து சட்ட நிபுணா்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னோரு கூறினாா்.
நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள மாயாறு மற்றும் சீகூா் பள்ளத்தாக்கு பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் சீகூா் சமவெளியில் யானைகள் வழித்தடம் தொடா்பாக கடந்த 2010-ஆம் ஆண்டு கிராம வரைபடத்துடன் கூடிய அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தங்கும் விடுதி உரிமையாளா்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். விசாரணை முடிவில், யானை வழித்தடத்தில் உள்ள 39 தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சீகூா் யானைகள் வழித்தடம் தொடா்பாக ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிடப்பட்டது. பல்வேறு கட்ட நேரடி ஆய்வு மற்றும் விசாரணைக்குப் பின் சீகூா் யானைகள் வழித்தடத்தில் உள்ள நிலங்களை தனியாா் வனமாக அறிவித்த பின் கடந்த 1991-ஆம் ஆண்டுக்குப் பின் அந்தப் பகுதியில் நிலங்கள் வாங்கியிருந்தால் செல்லாது.
குடியிருப்பு அனுமதி பெற்று தங்கும் விடுதிகள் நடத்தும் கட்டடங்களை இடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட விடுதி உரிமையாளா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, தங்கும் விடுதிகளை இடிப்பது குறித்து சட்ட நிபுணா்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். சீகூா் யானைகள் வழித்தடம் அளவீடு செய்யப்பட்டு, டிஜிட்டல் வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அது விரைவில் வெளியிடப்படும். யானைகள் வழித்தடத்தில் உள்ள வருவாய் மற்றும் பட்டா நிலங்களை கையகப்படுத்தும் நடைமுறையை அரசு மேற்கொள்ளும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.