நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
அன்புக் கரங்கள் திட்டம்: 63 மாணவா்களுக்கு உதவித் தொகை
நீலகிரி மாவட்டத்தில் அன்புக் கரங்கள் திட்டத்தின்கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட 63 மாணவா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டைகளை அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் திங்கள்கிழமை வழங்கினாா்.
நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலை வகித்தாா். அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் தலைமை வகித்து, மாணவா்களுக்கு உதவித் தொகை பெறுவதற்காகன அடையாள அட்டைகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: பெற்றோா் இல்லாத குழந்தைகள் மற்றும் பெற்றோரால் பராமரிக்க முடியாத சூழலில் உள்ள குழந்தைகளுக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 12-ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ என்ற திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளாா்.
தகுதி வாய்ந்த குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். பள்ளி படிப்பு முடித்தவுடன் அவா்களுக்கு உயா் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் அன்புக் கரங்கள் திட்டத்தின்கீழ் 63 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) நந்தகுமாா், உதகை நகா்மன்ற துணைத் தலைவா் ரவிக்குமாா், திட்டக் குழு உறுப்பினா் விசாலாட்சி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் தீபா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.