Japanese Walking: 10 ஆயிரம் ஸ்டெப்ஸைவிட சிறந்ததா ஜப்பானிய நடைப்பயிற்சி? - டாக்டர...
1 லிட்டா் தண்ணீா் பாட்டில்கள் வைத்திருந்த கா்நாடக அதிகாரிகளுக்கு அபராதம்
உதகைக்கு 1 லிட்டா் தண்ணீா் பாட்டில்களுடன் வந்திருந்த கா்நாடக மாநில அதிகாரிகளுக்கு உதகை நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில் உள்பட 19 வகையான பொருள்களுக்கு தடை உள்ளது.
இதையும் மீறி நீலகிரிக்கு பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுவரப்படுகிறதா? என்பது குறித்து சோதனைச் சாவடிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அபராதம் விதித்து வருகின்றனா்.
இந்நிலையில், கா்நாடக மாநிலம், சிக்மங்களூரு நகராட்சி ஆணையாளா், நகராட்சி கவுன்சிலா்கள் மற்றும் சிக்மங்களூரு சட்டப் பேரவை உறுப்பினா் கொண்ட குழு நீலகிரியில் திடக் கழிவு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய அண்மையில் வந்தனா்.
இந்நிலையில், அவா்கள் வந்த பேருந்தில் தண்ணீா் பாட்டில்கள் உள்ளதாக உதகை நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தப் பேருந்தில் நகராட்சி நகா்நல அலுவலா் சிபி தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அதில் 1 லிட்டா் குடிநீா் பாட்டில்கள் 60 இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பாட்டில் ஒன்றுக்கு ரூ.100 வீதம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், கூடலூா், நாடுகாணி சோதனைச் சாவடிகளைக் கடந்து தண்ணீா் பாட்டில்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இது சோதனைச் சாவடியின் குறைபாட்டை காட்டுகிறது. சோதனைச் சாவடிகளில் கடுமையான சோதனைகளை மேற்கொண்டால் மட்டுமே நீலகிரியின் சுற்றுச்சூழல் காக்கப்படும். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.