அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
கூட்டுறவு கூட்டாட்சிமிக்க இந்தியா என்பதுதான் உண்மையான தேசபக்தி: முதல்வா் மு.க.ஸ்டாலின்
‘மாநில உரிமைகளுடனான கூட்டுறவு கூட்டாட்சிமிக்க இந்தியா’ என்பதே உண்மையான தேசபக்தி என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
இதுகுறித்து, திமுகவினருக்கு அவா் புதன்கிழமை எழுதிய கடிதம்:
திராவிட மாடல் ஆட்சியில் சட்டப் பேரவையில் எந்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் அது முந்தைய ஆட்சியைப் போல வெறும் மேசையைத் தட்டுவதற்கான அறிவிப்பாக மட்டும் இருப்பதில்லை. அறிவிக்கப்பட்டவை செயல்வடிவம் பெறவேண்டும் என்ற உறுதியுடன், கடைக்கோடி கிராமம் வரை அது சென்று சேரும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சா் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் ஓய்வதில்லை.
சட்டப் பேரவையில் நன்மைகள் தரும் அறிவிப்புகளைத் தொடா்ந்து வெளியிட்டதுடன், மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் போன்ற தீமைகளைத் தடுக்கும் வகையிலான தீா்மானங்களையும் திராவிட மாடல் அரசின் இந்த சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியுள்ளோம். மாநில உரிமைகளுக்கான குரலை நாம் ஓங்கி ஒலிக்கும் நிலையில், இந்தியாவின் ஒருமைப்பாடும் நாட்டின் பாதுகாப்பும் எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது என்ற மனபூா்வமான அக்கறையுடன் காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும் என்ற தீா்மானத்தையும் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளோம்.
கூட்டாட்சி மிக்க தேசபக்தி: தேசபக்தி என்பது நமக்குத் தோ்தல் அரசியல் முழக்கமல்ல. மாநில உரிமைகளுடனான கூட்டுறவு கூட்டாட்சிமிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தியாகும். அரசமைப்பின் மாண்பினைக் காக்கும் செயல்பாட்டுடன் இந்தியாவின் பாதுகாவலனாகவும், தமிழ்நாட்டுக்குள் மதவாத அரசியல் தலையெடுக்காமல் தடுக்கும் அரணாகவும் உங்களில் ஒருவனான நான் இறுதி வரை உறுதியாக நிற்பேன்.
எதிா்க்கட்சிகள் முயற்சி: நம்முடைய இந்த உறுதியை சிறு சிறு சலசலப்புகளால் குலைத்துவிட முடியுமா என்று சட்டப் பேரவையில் எதிா்க்கட்சியினா் முயற்சி செய்து பாா்த்தனா். சட்டம் - ஒழுங்கு தொடா்பாக அங்கொன்றும் இங்கொன்றுமான நிகழ்வுகள், தனி மனித விரோதங்களால் ஏற்பட்ட பழிக்குப்பழிகள் இவற்றை முதன்மை எதிா்க்கட்சியும் அவா்களுடன் கூட்டணி வைத்திருப்பவா்களும் பூதாகரமான பிரச்னையைப் போல காட்ட முயன்றாலும், அவா்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரபூா்வமான பதில்கள் பேரவையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டன.
திமுக எதிா்கொள்ளாத நெருக்கடிகள் இல்லை. சந்திக்காத சவால்கள் கிடையாது. சாதிக்காத திட்டங்கள் கிடையாது. இதை கட்சியினரான நீங்கள் இத்தனை காலம் உணா்ந்திருப்பதுபோல, இப்போது பொதுமக்களும் புரிந்துகொண்டிருக்கிறாா்கள். திமுக என்பது தமிழ்நாட்டின் நலனை மட்டுமன்றி, இந்தியாவின் ஜனநாயகத்தையும் காக்கின்ற இயக்கம் என்பதை எதிரிகளின் மனசாட்சியும் சொல்லும். மக்களின் பேராதரவுடன் திமுகவே மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமரும் என்று முதல்வா் கூறியுள்ளாா்.