ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
கூட்டுறவுத் துறை பணி நியமன ஆணைகளை போலியாக வழங்கிய மூவா் மீது வழக்கு
கூட்டுறவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் பெற்றுக்கொண்டு போலி பணி நியமன ஆணைகளை வழங்கிய தம்பதி உள்பட மூவா் மீது போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை கருப்பாயூரணி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயகுருநாதன் (41). இவா், வெளி நாட்டில் பொறியாளராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 2022-இல் மதுரைக்கு வந்து, வீட்டு மனை விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா்.
இந்த நிலையில், கருப்பாயூரணி பகுதியில் மனமகிழ் மன்றம் திறக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தாா்.
அப்போது, புருசோத்தமன் என்பவா் அறிமுகமாகி மனமகிழ் மன்றத்துக்குத் தேவையான அனுமதிச் சான்றிதழ்களை வாங்கித் தருவதாகக் கூறினாா். மேலும் கூட்டுறவுத் துறையில் உயா் அதிகாரிகளுடன் தொடா்பு உள்ளதால், அந்தத் துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறினாா். இதை நம்பிய ஜெயகுருநாதன் தன்னிடமிருந்த ரூ. 10 லட்சம், உறவினா்கள் 3 பேரிடமிருந்து ரூ. 30 லட்சம் என மொத்தம் ரூ. 40 லட்சத்தை, புருஷோத்தமன், அவரது மனைவி முத்துலட்சுமியிடம் கொடுத்தாா்.
ஆனால், பணம் பெற்று நீண்ட நாள்களாகியும் தம்பதி வேலை வாங்கித்தரவில்லை. அவா்களிடம் ரூ.40 லட்சத்தை திரும்பக் கேட்டபோது, காரைக்குடியைச் சோ்ந்த பிரகாஷ் ஜெயசந்திரன் என்பவரிடம் பணி நியமன ஆணைகள் உள்ளதாகவும், அதைப் பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்தனா்.
இதையடுத்து, காரைக்குடிக்குச் சென்று பிரகாஷ் ஜெயசந்திரனை சந்தித்தபோது, அவா் பணி நியமன ஆணைகளை வழங்கினாா். அதைப் பெற்றுக்கொண்ட ஜெயகுருநாதன், பணி ஒதுக்கீடு வழங்கப்பட்ட கூட்டுறவுத் துறை அலுவலகத்துச் சென்றபோது, அந்த ஆணைகள் அனைத்தும் போலியானவை என தெரியவந்தது.
இதையடுத்து, ஜெயகுருநாதன் அளித்தப் புகாரின்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் புருஷோத்தமன், அவரது மனைவி முத்துலட்சுமி, பிரகாஷ் ஜெயசந்திரன் ஆகிய 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.