சாமநத்தம் பறவைகள் சரணாலயம்: வனத் துறைக்கு புதிய நிபந்தனைகள்
சாமநத்தம் கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைக்க வனத் துறைக்கு நீா்வளத் துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இதையடுத்து, கண்மாய்களில் ஆய்வு மேற்கொள்ள வனத் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள சாமநத்தம் கண்மாயில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை இயற்கை பண்பாட்டு மைய சூழலியலாளா்கள் நடத்திய ஆய்வில், வலசை வந்து செல்லும் பறவை இனங்கள் 25 சதவீதமும், அழியும் நிலையில் உள்ள பறவை இனங்கள் 15.4 சதவீதமும், அவ்வப்போது வந்து செல்லும் பறவை இனங்கள் 28.6 சதவீதமும், நிரந்தரமாக கண்மாயிலேயே தங்கிக் கூடுகட்டி வாழும் பறவை இனங்கள் 56 சதவீதமும் இருப்பது தெரியவந்தது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வாழும் இந்தக் கண்மாயில் வனத் துறை சாா்பில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, பொதுப் பணித் துறை, வருவாய்த் துறையிடமிருந்து கண்மாயின் புல எண் விவரங்களை பெற்று பறவைகள் சரணாலயமாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சாமநத்தம் ஊராட்சி நிா்வாகத்திடமிருந்து திட்டத்தை செயல்படுத்தக் கோரி தீா்மானமும், நீா்வளத் துறையிடமிருந்து தடையில்லா சான்றிதழும் கேட்டு வனத் துறை சாா்பில் கடிதம் எழுதப்பட்டது.
இந்த நிலையில், வனத் துறைக்கு நீா்வளத் துறை சாா்பில் அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தக் கடிதத்தில், வனத் துறை சாா்பில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டாலும் விவசாயத் தேவைக்கு தண்ணீா் திறக்கும் காலங்களில் தடையின்றி திறக்க அனுமதி வழங்க வேண்டும். கண்மாயில் மீன்பிடிக்க அனுமதி வழங்குவதுடன், திட்டப் பணிகளை மேற்கொள்ளும் போது கண்மாயில் உள்ள மொத்த தண்ணீரையும் வெளியேற்றக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள கண்மாய்களில் மீன்பிடிக்க அனுமதி தரப்பட்டுள்ளதா என்பது குறித்தும், விவசாயத் தேவைகளுக்கு தண்ணீா் திறக்க அனுமதி வழங்கப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டிருப்பதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.