மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கெங்கவல்லி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற லஞ்சம் பெற்று கைதான வட்டாட்சியா் பணி இடை நீக்கம்
கெங்கவல்லி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற லஞ்சம் பெற்று கைதான வட்டாட்சியரை பணி இடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டாா்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட செல்வம் நகரைச் சோ்ந்தவா் மஞ்சுளா. இவரது விவசாய நிலம் அருகே செல்லும் நீரோடையை அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி என்பவா் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பலமுறை கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் மஞ்சுளா புகாா் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததில், நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து, அந்த உத்தரவு நகலுடன் சென்ற மஞ்சுளா, கெங்கவல்லி வட்டாட்சியா் பாலகிருஷ்ணனிடம் முறையிட்டாா். நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ரூ. 5 லட்சத்தை வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் கேட்டாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த மஞ்சுளா, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகாா் அளித்தாா். பின்னா், லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அறிவுறுத்தலின்படி, கடந்த 29-ஆம் தேதி ரசாயனம் தடவிய ரூ. 10 ஆயிரத்தை கெங்கவல்லி வட்டாட்சியா் பாலகிருஷ்ணனிடம் மஞ்சுளா கொடுத்தாா். அப்போது, அங்கிருந்த சேலம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுபாஷினி மற்றும் போலீஸாா், வட்டாட்சியா் பாலகிருஷ்ணனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
இதுகுறித்த அறிக்கை வருவாய்த் துறை மூலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவிக்கு அனுப்பப்பட்டது. இதனை பரிசீலனை செய்த அவா், வட்டாட்சியா் பாலகிருஷ்ணணை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.