கெத்தாகக் கலக்குகிறாரா பிரதீப் ரங்கநாதன்? டிராகன் - திரை விமர்சனம்!
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான டிராகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
படத்தின் ஆரம்ப காட்சியிலேயே பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் காட்டப்படும் ’கெத்து’ மாணவனாக டிராகன் என்கிற ராகவன் (பிரதீப் ரங்கநாதன்) அறிமுகமாகிறார். படிப்பில் கவனம் செலுத்தாத, ஒழுக்கமீறல்களில் ஈடுபட்டு வரும் ராகவன் 48 பாடங்களில் தோல்வியடைந்து கல்லூரியைவிட்டு வெளியேறும் டிராகன், வாழ்க்கையில் நாய் படாதபாடு படுவார் என எதிர்பார்த்தால் இயக்குநர் வேறு ஒரு டுவிஸ்ட் வைத்திருக்கிறார்.
ஒழுங்காகப் படித்து பட்டம் பெற்ற மாணவர்களே வேலையில்லாமல் திண்டாடும்போது டிராகன் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஒருவராக மாறுகிறார். உருப்படாமல்போவான் எனப் பெயரெடுத்த நாயகன் தன் வாழ்க்கையில் பொருளாதார ரீதியில் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும்போது இன்னொரு டுவிஸ்ட். இப்படி அடுத்தடுத்த டுவிஸ்ட்களால் அதகளப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து.
இதுதான் கதையாக இருக்கும் என ஆரம்பத்தில் சில காட்சிகள் உறுதிப்படுத்தினால், கதையை சுவாரஸ்யமாக்க இயக்குநர் புத்திசாலித்தமான காட்சிகளை வைத்து ரசிகர்களை ’அடுத்தது என்ன’ என்கிற எதிர்பார்ப்புடன் வைத்திருக்கிறார்.

டிராகன் டிரைலர் வெளியானபோது இப்படம் டான் - 2 போல் இருக்கிறது என பல கிண்டல்கள் எழுந்தன. ஆனால், அந்த மாதிரியான தோற்றங்கள் பெரிதாக இல்லை. கல்லூரி காலத்தில் கெத்தாக இருக்க வேண்டும் என நினைத்து ஒழுங்காகப் படிக்காமல் இருந்தால் வாழ்க்கையில் என்னென்ன சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்பதை நகைச்சுவை பாணியில் இயக்குநர் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். முக்கியமாக, யூடியூப்பில் பிரபலமான விஜே சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்டோரின் நகைச்சுவைக் காட்சிகளும் பலத்த கைதட்டல் பெருமளவிற்கு உள்ளன.
‘ஓ மை கடவுளே' திரைப்படத்தில் காதல் காட்சிகளை நன்றாக எழுதிய இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, இப்படத்தில் அப்பா - மகன் காட்சிகளை உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறார். முழுமையான காதல், நகைச்சுவை படமாக மட்டும் இதை கையாளாமல் இன்றைய இளைஞர்கள் எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்கிற புரிதலுடன் படத்தை அணுகியிருப்பதற்கு பாராட்டுகள்.
ஆனால், டிராகனில் முதல் 20 நிமிடங்கள், ‘காலேஜ் கதைன்னாலே இதேதானா?’ என்கிற சலிப்பைக் கொடுக்கின்றன. அந்த வசனங்களை இயக்குநர் கவனத்துடன் நீக்கி, மாற்றுக் காட்சிகளை வைத்திருக்கலாம். இதனால், சில இடங்கள் ‘கிரிஞ்’-ஆகவே இருந்தன.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே திரைப்படத்திற்குப் பின் மீண்டும் ஒரு பிளாக்பஸ்டரை கொடுத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். நடிப்பில் கொஞ்சம் முதிர்ச்சியைக் காட்டினாலும் பல இடங்களில் நடிகர் தனுஷை நினைவுபடுத்துகிறார். அனுபமா பரமேஸ்வரனுடனான காதல் காட்சிகளிலும் மிஷ்கின் உடனான காட்சிகளிலும் நல்ல நடிகராகவே தெரிகிறார். பிரதீப் திரை வாழ்வில் டிராகன் முக்கிய இடத்தை கொடுத்திருக்கிறது.

நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு இரண்டாம் பாகத்தில் கூடுதல் காட்சிகள் கிடைத்திருப்பதால் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். இயக்குநர் மிஷ்கினும் பல இடங்களில் கைதட்டல் பெற்று படத்தின் வெற்றிக்கு பங்களிப்பை செய்திருக்கிறார்.
நடிகர்கள் கயோடு லோஹர், கௌதம் வாசுதேவ் மேனன், இந்துமதி எல்லாரும் கதைக்குத் தேவையான நடிப்பை கச்சிதமாக வழங்கியிருக்கின்றனர். முக்கியமாக, ஆரம்ப காட்சிகளில் நடிகர் மரியம் ஜார்ஜ் கதாபாத்திரம் சரியாக இல்லை எனத் தோன்றினாலும் படம் நகர நகர கலக்கிவிட்டார். மரியம் ஜார்ஜ்க்கு மிக முக்கியமான படம் இது.
இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் கதைக்கு பலமாகவே அமைந்துள்ளன. ஒளிப்பதிவு உள்பட மற்ற தொழில்நுட்ப பணிகளும் படத்தின் தரத்தை உறுதிசெய்துள்ளன.
தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்களுக்கு பெரிய தேவை உருவாகியிருக்கிறது. வெறும் நகைச்சுவையாக ஒரு கதையைச் சொன்னாலே படம் வெற்றியை நோக்கி நகர்ந்துவிடும். ஆனால், டிராகனில் சிரிக்க வைப்பதுடன் கல்லூரி காலம் எப்படி வாழ்க்கைக்கு முக்கியம் என்பதையும் நுட்பமாக இயக்குநர் பதிவு செய்திருக்கிறார். முதல்பாதியில் சின்ன சின்ன சோர்வுகள் எழுந்தாலும் முழுமையாக நல்ல படம் என்கிற திருப்தியையே டிராகன் கொடுத்திருக்கிறது!