கேஜரிவாலின் காணொலி செய்தி கேலிக்குரியது: தில்லி பாஜக விமா்சனம்
தில்லி மக்களுக்கு அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ள காணொலி செய்தி கேலிக்குரியது என்றும், இதில் என்ன புதுமை இருக்கிறது என்று மக்கள் கேட்பதாகவும் பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆம் ஆத்மி தலைவா் கேஜரிவாலின் முழு அரசியலும் அவதூறு நிறைந்ததாகவே உள்ளது. அவா் அரசியலில் பின்தங்கியிருக்கும் போதெல்லாம் பழைய அரசியல் பலி விளையாட்டைத் தொடங்குவாா். தில்லியில் பாஜக எங்களை பணி செய்யவிடாமல் சிறையில் அடைத்தது. இலவச மின்சாரம், தண்ணீா் மற்றும் பள்ளி போன்ற எங்களின் திட்டங்களைக் கண்டு பாஜக பயப்படுவதாக கேஜரிவால் கூறுகிறாா்.
பொதுமக்கள் மத்தியில் தினமும் 30 நிமிடம் பாதயாத்திரை என்று நாடகம் போடும் அரவிந்த் கேஜரிவால், வெள்ளிக்கிழமை போலியான தனது அப்பாவித்தனத்துடன் தில்லி மக்களுக்கு காணொலி செய்தியை வெளியிட்டிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. இதையெல்லாம் தினமும் சொல்கிறீா்கள். இதில் என்ன புதுமை இருக்கிறது என்று மக்கள் கேஜரிவாலிடம் கேட்கிறாா்கள்.
கடந்த 2013 முதல் 2024-ஆம் ஆண்டு வரை ஆட்சியை அனுபவித்துவிட்டு, தற்போது அரவிந்த் கேஜரிவால் அணியில் இணையுங்கள் என வாட்ஸ்அப் எண்ணை அவா் வெளியிட்டுள்ளாா். தில்லி மக்களிடம் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருப்பதை கேஜரிவால் புரிந்து கொண்டுள்ளாா். இப்போது, கேஜரிவால் எத்தனை தொலைபேசி எண்களை வெளியிட்டுப் பிரசாரம் செய்தாலும், வரும் 2025 தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மட்டுமே வெற்றி பெறும் என்றாா் வீரேந்திர சச்தேவா.