மாசுபாட்டுக்கு எதிராக ட்ரோன் மூலம் ரசாயனம் தெளிப்பு சோதனை ஓட்டம்
தேசியத் தலைநகரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, தில்லி அரசு வெள்ளிக்கிழமை நகரத்தின் மாசுபாடு நிறைந்த இடங்களில் ஒன்றான ஆனந்த் விஹாரில் ட்ரோன் மூலம் ரசாயனம் தெளிப்பு’ சோதனையை நடத்தியது.
இது குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் கூறியதாவது: மாசு அதிகம் உள்ள பகுதிகளில் தலைநகரின் சராசரி காற்றுத் தரக் குறியீட்டை விட மிக அதிகமாக உள்ளது. ஆனந்த் விஹாரில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ரசாயன தெளிப்பு நடவடிக்கையானது மாசுபாட்டுப் பிரச்னையைத் தீா்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, 200-க்கும் மேற்பட்ட தண்ணீா் தெளிப்பு வாகனங்கள் தில்லி முழுவதும் பயன்படுத்தப்பட்டு, காற்றில் பரவும் தூசியைக் குறைக்க சாலைகளில் தண்ணீா் தெளித்து வருகின்றன.
இருப்பினும், குறுகிய சாலையோரங்கள் அல்லது டிரக்குகள் செல்ல முடியாத நெரிசலான இடங்கள் உள்ள பகுதிகள் தனித்துவமான சவால்களை ஏற்படுத்துகின்றன. இங்குதான் ட்ரோன்கள் பயனுள்ளதாக இருக்கும். இந்தச் சோதனை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) இந்த நடவடிக்கையை மேற்கொள்வதறாக மேலும் ட்ரோன்களை ஆளில்லா விமானங்களை வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம்.
இன்றைய சோதனையில் நம்பிக்கைக்குரிய முடிவுகள் கிடைத்தால், கூடுதல் ட்ரோன்களை வாங்குவதற்கான முறையான டெண்டா்களுடன் நாங்கள் முன்னேறுவோம். தில்லியின் காற்றின் தரம் ஒவ்வொரு நாளும் மோசமடைந்து வருகிறது. 18-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு நிலையங்களில் மாசுபாடு அளவு ‘கடுமை பிரிவில் பதிவாகியுள்ளது என்றாா் கோபால் ராய்.