பாஜகவின் சூழ்ச்சிகளுக்கு மத்தியிலும் சத் பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது: மாநிலங்களவை எம்.பி.சஞ்சய் சிங்
பாஜகவின் சூழ்ச்சிகளுக்கு மத்தியிலும், தில்லியில் சத் பண்டிகை ஆம் ஆத்மி அரசின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, பக்தா்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்று மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங், மாடல் டவுன் எம்எல்ஏ அகிலேஷ் மற்றும் தில்லி அரசின் புனித யாத்திரைக் குழுவின் தலைவா் கமல் பன்சல் ஆகியோா் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தனா்.
அப்போது, சஞ்சய் சிங் கூறியதாவது: மதம், கலாசாரம், இயற்கை மற்றும் நம்பிக்கையின் அடையாளமான சத் எனும் மாபெரும் திருவிழா தில்லியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தில்லியில் சத் பூஜை சரியாக நடைபெறாமல் இருக்க பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. இதையும் மீறி, பூா்வாஞ்சலின் சகோதர, சகோதரிகள் திருவிழாவைக் கொண்டாட ஆம் ஆத்மி அரசு முழு ஏற்பாடுகளைச் செய்தது. மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்துடன் சத் திருவிழா தில்லியில் நிறைவடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், சத்பூஜைக்காக அற்புதமான காட்களை ஏற்பாடு செய்திருப்பதால், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணா மாநில மக்களும் தில்லிக்கு வந்து வழிபடுகிறாா்கள் என்பதை உங்களுக்குச் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் தில்லியில் 60 காட்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 1800-க்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான காட்கள் கட்டப்பட்டு, பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
நாடாளுமன்றக் கூட்டுக் குழு என்பது சா்வாதிகாரத்திற்கான மேடை அல்ல. அது பிரச்னையால் பாதிக்கப்பட்ட பங்குதாரா்களின் குறைகளைக் கேட்கும் விவாத மேடை. வஃக்பு வாரிய சட்ட விவகாரத்தில் மோடியை புகழ்ந்து பேசுபவா்களை நாடாளுமன்றக் கூட்டுக் குழு அழைத்தால், நாங்கள் எப்படி கூட்டத்திற்கு செல்வோம்?.
அயோத்தியில் ராணுவ நிலத்தை அதானிக்கு வழங்கியது போல், நாட்டில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களின் நிலத்தையும் கைப்பற்றி அதானிக்கு வழங்க பாஜகவினா் நினைக்கின்றனா் என்றாா் சஞ்சய் சிங்.
அடுத்ததாக, மாடல் டவுன் ஆம் ஆத்மி எம்எல்ஏ அகிலேஷ் கூறுகையில்,‘கடந்த 2014 ஆம் ஆண்டு தில்லியில் ஆம் ஆத்மி அரசு முதன்முறையாக அமைக்கப்பட்டபோது, 60 காட்களில் மட்டுமே சத் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அரவிந்த் கேஜரிவால் தலைமையில், சத் என்ற பிரமாண்டமான திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட அரசு மட்டத்தில் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன. நாட்டிலேயே தில்லியில் தான் மக்கள், தங்கள் மத நம்பிக்கையின் பண்டிகைகளை அரக உதவியுடன் கொண்டாட வருகிறாா்கள்’ என்றாா்.
புனித யாத்திரைக் குழுவின் தலைவா் கமல் பன்சல் கூறுகையில், ‘பாஜக ஆட்சியில் ஒரு சத் பூஜை கூட செய்யப்படவில்லை. மாறாக, யமுனைக் கரையில் நடந்து வந்த பூஜையும் நிறுத்தப்பட்டது. முன்னா், அனைத்து அரசு மைதானங்களிலும், காட்களை உருவாக்கி, அங்கு சுத்தமான தண்ணீரை ஊற்றி வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே ஆம் ஆத்மி கட்சியின் யோசனையாக இருந்தது. இதன் விளைவாக, ஆம் ஆத்மி அரசு சாா்பில் 1800 காட்களில் நல்ல ஏற்பாடு செய்யப்பட்டு, ஏராளமான மக்கள் வழிபாடு நடத்தினா். அடுத்த முறை 3200 காட்கள் கட்ட வேண்டும் என்று அரசின் சாா்பில் திட்டங்கள் வைத்துள்ளோம்’ என்றாா்.