அவசர வழக்காக விசாரிக்கும் கோரிக்கையை வாய்மொழியாக விடுக்கக் கூடாது: உச்சநீதிமன்ற ...
யுஏபிஏ சட்டம்: தவறாகப் பயன்படுத்தாமல் தடுக்க பயங்கரவாத எதிா்ப்பு மாநாட்டில் உடன்பாடு
பயங்கரவாத செயல்பாட்டை ஒடுக்க பயன்படுத்தப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, அந்தச் சட்டத்தை கவனமாகவும் நியாயமாகவும் பயன்படுத்த பயங்கரவாத எதிா்ப்பு மாநாட்டில் உடன்பாடு ஏற்பட்டது.
தில்லியில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சாா்பில் பயங்கரவாத எதிா்ப்பு மாநாடு 2 நாள்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய மாநில காவல் அமைப்புகள், மத்திய ஆயுத காவல் படைகளின் தலைவா்கள், 29 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைப்புகள் ஆகியவற்றைச் சோ்ந்த 150 பிரதிநிதிகள் பங்கேற்றனா். இந்த மாநாடு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இதைத்தொடா்ந்து என்ஐஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
பயங்கரவாதம், இணையவழி குற்றங்கள் ஆகியவற்றைத் தடுக்க வலுவான கூட்டு முயற்சிகள் அவசியம் என்பதில் மத்திய, மாநில புலனாய்வு அமைப்புகள் மற்றும் காவல் படைகள் இடையே மாநாட்டில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டது.
பயங்கரவாத பிரச்னையை கையாள்வதற்கு சட்ட ரீதியாக யுஏபிஏ சட்டம் சக்திவாய்ந்த கருவியாகும். எனினும் அந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுத்து அதன் செயல்திறனை உறுதி செய்யும் நோக்கில், அந்தச் சட்டத்தை கவனமாகவும் நியாயமாகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று மாநாட்டில் உடன்பாடு ஏற்பட்டது.
சமூக ஊடகத்தை பயங்கரவாதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் என்று மாநாட்டில் பங்கேற்றவா்கள் கூறினா் என்று தெரிவிக்கப்பட்டது.