எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
கேரளத்தில் நிபா வைரஸ் பரவல்: கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், கோவையில் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமென்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு, மலப்புறம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாகக் கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உள்ளிட்ட அறிகுறிகளுடன் யாராவது? சிகிச்சைக்கு வந்தால் அது குறித்து தகவல் தெரிவிக்க அனைத்து மருத்துவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பாக சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிபா வைரஸ் பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்..
நிபா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. குறிப்பாகப் பழம் தின்னி வௌவால்கள் மற்றும் பன்றிகள் மூலம் பரவுகிறது. இதன் பாதிப்பு மூளைக்காய்ச்சல் அறிகுறிகளை வெளிப்படுத்தும், கடும் காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுயநினைவு இழத்தல், மனக் குழப்பம், கோமா மற்றும் மரணம் ஏற்படலாம்.தொற்று ஏற்பட்ட ஐந்து முதல் 15 நாள்களுக்குள் அறிகுறிகள் வெளிப்படும். அது தென்பட்ட 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் தீவிர மயக்க நிலை சுய நினைவு இழத்தல், மனக்குழப்பம் ஏற்படலாம், பாதிப்பைக் கண்டறிய காய்ச்சல் மற்றும் மூளை அலர்ஜி நோய்களுக்கான பரிசோதனைகள் செய்ய வேண்டும், ரத்தம் மாதிரிகளை பரிசோதித்தும் கண்டு அறியலாம்.
பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம், ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களைத் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும், சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் கவனித்துக் கொள்பவர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள் நன்றாகத் தண்ணீரில் கழுவிப் பயன்படுத்த வேண்டும், விலங்குகள் கடித்ததைச் சாப்பிடக்கூடாது. பன்றிகளைக் குடியிருப்பு பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவர்களை அணுகி உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.