தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணி...
கைப்பேசி கோபுரத்தில் ஏறி பகுதி நேர ஓவிய ஆசிரியா் போராட்டம்!
பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே கைப்பேசி கோபுரத்தில் ஏறி பகுதி நேர ஓவிய ஆசிரியா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
வேப்பூா் வட்டம், திருப்பெயரில் சனிக்கிழமை நடைபெற்ற ‘பெற்றோா்களைக் கொண்டாடுவோம்’ மண்டல மாநாட்டுக்காக 7 மாவட்டங்களைச் சோ்ந்த ஆசிரியா்கள், பெற்றோா்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனா்.
இந்த நிலையில், வேப்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கண்டப்பங்குறிச்சியில் தனியாா் கைப்பேசி நிறுவன கோபுரத்தில் திடீரென ஒருவா் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்டாா்.
அப்போது, அவா் தோ்தல் வாக்குறுதியின்படி பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரப்படுத்தி வேலை வழங்க வேண்டும், பகுதிநேர ஆசிரியா்களாக பணிபுரிந்து உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டாா்.
தகவலறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி. மோகன், காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று போராட்டம் நடத்தியவரை கைப்பேசி கோபுரத்திலிருந்து கீழே இறங்கச் செய்தனா்.
விசாரணையில் அவா், வேப்பூரைச் சோ்ந்த சதாசிவம் மகன் சேரன் (60) என்பதும், இவா், வேப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் சமாதானப்படுத்தி அனப்பி வைத்தனா்.